திங்கள், 27 டிசம்பர், 2010

மனுஷ்யபுத்திரனின் புதிய கவிதை நூல்

                                                                        


கடந்த பதிவுக்கும் இந்தப் பதிவுக்குமிடையே ஏறத்தாழ பத்து நாட்கள்.

 நீ........ண்ட இடைவெளிதான்.

காரணம், ஒரு பிரமிப்பான  அனுபவம்.

சாருவின்  ஏழு நூல்கள் வெளியீட்டுவிழா பற்றிய எனது பதிவு charuonline  வலைப்பக்கத்தில் இடம் பெற்றதுதான் தாமதம், மள மள வென்று குவியும் அரசியல்வாதிகளின் ஊழல்கள் போல , எனது வலைப்பக்கத்திற்கு திரை கொள்ளா அளவிற்கு விசிட்டர்கள். மூன்று செகண்டிற்கு முன்பு நியூயார்க்கிலிருந்து... பத்து செகண்டிற்கு முன்பு கோலாலம்பூரிலிருந்து... ஒரு நிமிடத்திற்கு முன்பு லணடனிலிருந்து ..என்று மொய்த்துத் தள்ளிவிட்டர்கள். அப்போதுதான் பூகோளப் பந்து முழுவதுமாய்  விரிந்து பரந்திருக்கும் சாருவின் ரசிகப் பட்டாளத்தின் முழு வீச்சையும் பிரமித்து உணர முடிந்தது, சாரு சார், உங்கள் ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு எஸ்.எம்.எஸ் தட்டிவிட்டால் கூடப் போதும் , நோபல் கமிட்டி அலறியடித்துக் கொண்டு உங்களுக்கு நோபல் பரிசு அறிவித்து விமான டிக்கட்டையும் அனுப்பிவிடும். ( உங்களுக்குதான்  விமானப் பயணம் என்றால் மிகவும் இஷ்டமாயிற்றே!)

ஓகே, விஷயத்திற்கு வருவோம் ..,

நேற்று மனுஷ்யபுத்திரனின் ` இதற்கு முன்பும், இதற்கு பிறகும்' கவிதை நூல் வெளியீட்டு விழா, தேவநேயப் பாவாணர் அரங்கில் .

வாசலில் உபசரிக்கப்பட்ட சமோசாவையும், தேனீரையும் தாண்டி அரங்கினுள்  நுழைந்தால்... அரங்கு கொள்ளா கூட்டம். மனுஷ் சாரின் முகத்தில் சூரியப் பிரகாசம் !

உயிர்மை பதிப்பகம் சார்பில் வரவேற்றுப் பேசிய லல்லி, 11 மாதங்களின் இடைவெளியில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு இது என்று தெரிவித்தார்.

நூல் வெளியீட்டுக்குப் பின் முதல் ஆளாக உரையாற்ற வந்த  எஸ்.ராமகிருஷ்ணன்நூல் வெளியீடு மட்டுமே தனக்கு இடப்பட்ட பணி என்றும் , தான் ஐந்து நிமிடம் மட்டுமே பேசப் போவதாகவும் தெரிவித்து ஒட்டு மொத்த ஆடியன்சையும் அப்செட்டாக்கினார்.

வாழ்வின் அபத்தத்தைக் கவிதைகள் மூலம் பதிவு செய்த அற்புதக் கவிஞர்களான பாரதி, ஞானக்கூத்தன், பிரமிள், ஆத்மாநாம் ஆகியோர் அடங்கிய வரிசையின் உச்சமாக மனுஷ்யபுத்திரன் திகழ்வதாகத் தெரிவித்தார். வெறும் உபசார வார்த்தைகள் அல்ல அவை. ஏனெனில் உபசாரத்திற்காகப் பேசக் கூடியவர் அல்ல எஸ்.ரா.

தொடர்ந்து பேச வந்த நா.முத்துக்குமார் , மனுஷ்யபுத்திரன் பல புதிய தளங்களில் எழுத வந்திருப்பதாக சிலாகித்து  , தனக்குப் பிடித்த ` ஒரு சுடரை வைத்துக்கொண்டு' கவிதையை வரிக்கு வரி ஆய்வு செய்து பாராட்டிமுத்தாய்ப்பாக 2011 ல் மனுஷ்யபுத்திரன் ஒரு நாவல் எழுத வேண்டுமென்ற `வேண்டுகோள் வெடிகுண்டு' ஒன்றை வீசிவிட்டு நாற்காலிக்குத் திரும்பினார்.

அடுத்து உரையாற்ற வந்தார் தமிழச்சி தங்கப்பாண்டியன்.

புதிய கவிதைகள் தன்னைப் பிய்த்துப் போட்டு மீண்டும் ஒன்று சேர்த்ததாகக் குறிப்பிட்டார்.

இதுவரை இல்லாத வழக்கமாக மனுஷ்யபுத்திரனை ஒருமையில் அழைக்கப் போவதாக பிரகடனம் செய்து சபையோரை திடுக்கிடச் செய்தார். " நாங்கள் எல்லோரும் எங்களைப் பற்றியே எழுதிக் கொண்டிருக்கும்போது , சமுதாயத்தின் எல்லாப் பிரதிநிதிகளைப் பற்றியும் எழுதுவதற்கு இவனுக்கு (!) மட்டும் எங்கிருந்து பேனா கிடைத்தது ? " என்றார். தொடர்ந்து , தொகுப்பில் தனக்குப் பிடித்த கவிதைகளைப்  பட்டியலிடத் தொடங்கினார்அப்போதுதான் கவனித்தேன், புத்தகத்தின் ஏராளமான பக்கங்களில் கற்றை கற்றையாய்  புக் மார்க் . பிடித்த எல்லாக் கவிதைகளையும் வாசிக்க இயலவில்லை என்ற விசனத்துடன் உரையை நிறைவு செய்தார்

மனுஷ்யபுத்திரனின் கவிதை நூல் ஆயிரம் மூட்டை மல்லிகை மலர்களிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு துளி வாசனைத் திரவியத்திற்கு சமம்  என்ற சாரம் மிகுந்த பாயிண்ட் ஒன்றைப் பரிசளித்து விட்டுப் பெவிலியன் திரும்பினார் இயக்குநர் வசந்த பாலன்.

சபை கல கலக்க, கைதட்டல் தூள் கிளப்ப அடுத்துப் பிரசன்னமானார் சாரு.  (இவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஒரே ஜாதகமா என்ன, அப்படி ஒரு charismatic image , மகா ஜனங்களுக்கு மத்தியில் ! ).

'பாப்லோ நெரூடா, பில்கே இவர்கள் கவிதைகளைவிட உங்கள் கவிதைகள் பிரமாதம்' என்று ஒரு குறுந்தகவல் அனுப்பினாராம் மனுஷ்யபுத்திரனுக்கு. அதற்கு வந்த பதிலில் நொந்து விட்டாராம். பதில் இதுதான் - ` உங்கள் அன்புக்கு நன்றி '.  ஆத்மாநாம், நகுலன், பிரமிள், அசோகமித்திரன் போன்ற கவிஞர்களை முப்பந்தைந்து வருடங்களாகக் கொண்டாடுகிறேனே அந்த பரந்து பட்ட வாசிப்பின் விளைவுதான் அந்தப் பாராட்டே தவிரவெறும் அன்புக்காகப் பாராட்டுபவன் நானல்ல என்று ஆணித்தரமாக அறிவித்தார்.

பாப்லோ நெரூடாவை இங்கே கொண்டாடுகிறோம், இது போல் சிலியில் மனுஷ்யபுத்திரனைக் கொண்டாடுவார்களா என்று வேதனை வினா எழுப்பினார்.

`பணி நீக்க உத்தரவு' என்ற கவிதையை மிக அழகாக வாசித்துக் காட்டினார்.

                        துணி துவைப்பதற்காக
                        விடுமுறை நாட்களுக்குக்
                        காத்திருக்க வேண்டியதில்லை

என்ற வரிகளை உச்சரித்துவிட்டு 'இதெல்லாம் உனக்கு எப்படிடா தெரிஞ்சது? ' என்று மனுஷ்யபுத்திரனைப் பார்த்து கேட்ட கேள்வி நட்பின் கிளைமாக்ஸ்.

கவிதைப் புத்தகம்  கடவுளும் , சாத்தானும்  சேர்ந்து எழுதிய தொகுப்பு என்று வர்ணித்தது வித்தியாசம்.

சாரு பேசிவிட்டு அமர்ந்ததும் , அரங்கேறியது நிகழ்ச்சி  நிரலில் இல்லாத ஒரு நிகழ்வு.

உயரமாக , டி சர்ட் அணிந்த ஒரு மனிதர் மேடைக்கு வந்து மைக் பிடித்துப் பேசத் தொடங்கினார். என்ன பேசுகிறார் என்று கிரகிப்பதற்குள் சடாரென்று ஒரு காரியம் செய்தார். வேக வேகமாக சர்ருவின் அருகில் சென்று , அவர் கையைப் பிடித்து ( டென்ஷன் ஆகாதீர்கள் ..) பிறகு அவர் விரலைப் பிடித்து  (ஐயோ, நான் தான் சொன்னேனே , டென்ஷன் ஆக வேண்டாம்னு)...பள பளவென்று ஒரு தங்க மோதிரத்தை அணிவித்தார் . அரங்கமே ஸ்தம்பித்தது, சாரு உள்பட. பகலாக இருந்திருந்தால் , பறக்கின்ற பறவைகளெல்லாம் ஒரு நொடி நிறுத்தி  , பிறகு மீண்டும் பறந்திருக்கும், அலைகளெல்லாம் ஒரு பிரேக் போட்டு மீண்டும் ஆர்ப்பரித்திருக்கும் - பாரதிராஜா படம் போல ! )

தொடர்ந்து பேச வந்த பிரபஞ்சனை `மோதிர அணிவிப்பு உற்சவம்ரொம்பவே பாதித்துவிட்டது. ` அடடா, யாராவது ஒரு பத்து மோதிரத்தோடு வந்துமேடையிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் அணிவித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ' என்று ரொம்பவே அங்கலாய்த்து விட்டு , அரை குறை மனதோடு சப்ஜக்டிற்கு வந்தார்.

பிரென்ச் எழுத்தாளர் மார்கரட் தூராசிடம் அந்நாட்டின் ஜனாதிபதி அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுக் காத்திருந்ததை எழுத்தாளர்களின் பொற்காலம் என்று வர்ணித்தார்.

மார்கரெட் தூராசுக்கும், தால்ஸ்தாவெஸ்கிக்கும் இடைப்பட்டவர் மனுஷ்யபுத்திரன் என்று அளவிட்டார். அவருடைய படைப்புகள் ஞானபீட சிபாரிசுக்குத் தகுந்தவை என்ற சிபாரிசோடு விடை பெற்றார்.

கூட்டத்தில் பேச மறுப்பதற்குத் தன்னிடம் நூறு காரணங்கள் இருந்தாலும் , விரும்பி வந்ததாக பாரதி கிருஷ்ணகுமார் தனது சிறப்புரையைத்  துவக்கினார். எப்போதும் கம்பீரமான குரலில், ஆணித்தரமான கருத்துக்களை சபை முன்னர் உலவ விட்டு வசீகரிக்கும் இவரது  ஸ்டைல் ஏனோ இப்போது மிஸ்ஸிங் . நிறைய சிரிப்புத் தோரணங்களோடு , தனக்குப் பிடித்த கவிதைகளைப் பட்டியலிட்டு முடித்தார்.

நிறைவாக ஏற்புரை ஆற்ற வந்த மனுஷ்யபுத்திரனின் உரை உண்மையிலேயே நிறைவான ஒன்று.

`நீங்கள் மிகச் சிறந்த எழுத்தாளர் ஆக வேண்டுமெனில்இந்த நாளை இன்றோடு மறந்து விடுங்கள்' என்று தனக்கு  சன்ஸ்கிருதி சம்மான் விருது வழங்கப்பட்ட அன்று  எழுத்தாளர் விக்ரம் சேத் குறிப்பிட்டதை நினைவு கூர்ந்தார்.

" நான் செய்த வேலைக்கான அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவே  தோன்றுகிறது " என்று தன்னடக்கத்துடன் குறிப்பிட்டுக் கூட்டத்தை நிறைவு செய்தபோது அரங்கிலிருந்த நாற்காலிகள் ஒன்று கூட காலி இல்லை.

நவீன இலக்கியத்திற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் கூட்டத்தில் பேசிய  எல்லோருக்குமே இருந்ததைக் கண்கூடாகக் காணமுடிந்ததுஅங்கீகாரத்தை எதிர்பார்ப்பதற்கு முன் , அதனை அறிமுகம் செய்யும் பணியினை செய்வது நமது கடமையில்லையா ?

 இளைஞர்களிடம் - குறிப்பாகக் கல்லூரி மணவர்களிடம் பயிற்சி முகாம்கள் மூலமாக நவீன இலக்கியத்திற்கான அறிமுகப் படலத்தைத் தொடங்கலாமே !

நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும், அதிக செலவில்லாத வகையில், சிறு சிறு உள்ளரங்குக் கூட்டங்கள் மூலம் அறிமுகப்படுத்தலாமே !

கொஞ்சம் கொஞ்சமாக பர்கர்களின் சுவையும் , பிட்சாக்களின் சுவையும் இளைய தலைமுறைக்குப் பிடித்துப் போய்விட்ட நிலையில் , இனிய தமிழ் இலக்கியங்கள் மட்டும் பிடிக்காதா என்ன ?

முன்னோடி எழுத்தாளர்கள் சிந்திப்பார்களாக !



6 கருத்துகள்:

VELAN சொன்னது…

அருமையான கட்டுரை. மதுரையில் வாழும் எங்களுக்கு விழாக்களில் கலந்து கொள்ள முடியாத வருத்தத்தை உங்கள் கட்டுரை போக்கி விட்டது. தேகம் புத்தக விழாவிற்கு வர எவ்வளவோ முயன்றும் வர முடியாமல் போய்ய் விட்டது. அடுத்த தடவை மதுரை வந்தால் சாருவை தவற விடப்போவதில்லை.

நிஷாந்தன் சொன்னது…

உங்கள் பாராட்டுக்கு நன்றி திரு வேலன். சாரு மதுரை வரும் வரை நீங்கள் ஏன் காத்திருக்க வேண்டும் ? ஜனவரி 4 முதல் 17 வரை நடைபெறவுள்ள சென்னை புத்தகக் கண்காடசிக்கு வாருங்களேன்,உயிர்மை ஸ்டாலில் சாரு, மனுஷ்யபுத்திரன், எஸ்.ராமகிருஷ்ணன் என நமக்குப் பிரியமான எல்லா எழுத்தாளர்களையும் சந்திக்கலாமே.

Ben சொன்னது…

வழக்கம்போலவே சிறப்பான பதிவு நண்பரே! உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நிஷாந்தன் சொன்னது…

நன்றி நண்பரே !

தங்களுக்கும் எனது இனிய

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

Garunyan Konfuzius சொன்னது…

பாரதி குமாரின் பேச்சை அன்றுதான் முதன்முதலாகக்
கேட்டேன்.சிறப்பாகத்தானே பேசியிருந்தார்?

கவிதை தரும் அனுபவங்களைப் பேசியது, போட்டோவாதல் ஆகிய விஷயங்கள் சுவை நிறைந்தன.

காருண்யன் கொன்ஃபூசியஸ்- பெர்லின்

நிஷாந்தன் சொன்னது…

நன்றி திரு.காருண்யன் அவர்களே !

வழக்கமாக பாரதி கிருஷ்ணகுமாரின் உரையில் நர்த்தனமாடும் இலக்கிய கம்பீரம் அன்று சற்றுக் குறைவாக இருந்தது என்பதுதான் எனது ஆதங்கம். அவரது ஏராளமான உரைகளைக் கேட்டிருப்பதால் ஏற்பட்டுவிட்ட ஒப்பீட்டு உணர்வு கூடக் காரணமாக இருக்கலாம்.

அடிக்கடி வலைப்பூவிற்கு வாருங்கள்,
அற்புதக் கருத்துரை தாருங்கள் !

கருத்துரையிடுக