ஞாயிறு, 5 டிசம்பர், 2010

மழை குறித்து...


கடலில் தோன்றிய காற்றழுத்தக் குறைவு காரணமாக தமிழ் நாடெங்கும் வெள்ளக்காடு.

இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்ற அறிவிப்பு இரண்டிரண்டு நாட்களாக நீடித்துக் கொண்டே போகிறது.

பள்ளிக் குழந்தைகளெல்லாம் தொலைக் காட்சிப் பெட்டியின் முன் ஆஜர். வானிலை ஆராய்ச்சி நிபுணர் ரமணன் அங்கிள் பள்ளிக் கூட விடுமுறை அறிவிப்பு வெளியிடுவதால் மாணவ சமுதாயத்திற்கு இப்போதெல்லாம் அவர் மீது கொள்ளைப் பிரியம்.

மழை குறித்து ஒரு கவிதை......

எப்போதும் போல் அது
வெகு சாதாரணமாகத்தான் தொடங்கியது
சிறு சிறு துளிகளாய்..

முன்னறிவிப்பில்லா விடுமுறையில்
தொலைந்து போனது சூரியன்

ஆகாயத்தையும் தரையையும்
இடையறாது பின்னிப் பிணைக்கும்
நூலிழைகளாய் மழைத்துளிகள்

மணலன்றி வேறெதுவும் கண்டறியா
வைகை  கூட
நீர் நிரப்பி நிரூபித்தது
தான் ஆறென்று.

கரையோர அலைகளையும்
படகுகளையும் அளவளாவ விட்டு விட்டு
குடிசைகளுக்குள் முடங்கிப் போனார்கள்
மீனவர்கள்

தாழ்வான சாலைகளில்
பாய்ந்தோடும் சாக்கடை நீரில்
சிக்கித் தத்தளித்தபடி
நகரப் பேருந்துகளெல்லாம்
நகராப் பேருந்துகளாய்...

நகரம்  மிதந்து கொண்டிருக்கும் செய்தியை
நனைந்து வந்து செப்பின
தினசரி செய்தித் தாள்கள்

இடிந்த கட்டிடங்களின் எண்ணிக்கையையும்
மூழ்கிய பயிர்களின் ஏக்கராக் கணக்கையும்
திரும்பத் திரும்பத் தெரிவித்தன
ஊடகங்கள் .

ஆனால்

எவருக்கும் தெரியவேயில்லை -

எங்கள்  எதிர்  வீட்டுத் தென்னை மரத்தில்
எப்போதும் உறங்கும் காக்கை
இரவாகியும் ஏன் வரவில்லையென்று .

6 கருத்துகள்:

சம்பத்குமார் சொன்னது…

அருமை அன்பரே

Tamizh சொன்னது…

மழை குறித்த கவிதை - ஒரு கவிதை மழை.

காகத்திற்காக வருந்தும் காருண்யம் அருமை.

தொடரட்டும் கவிதை மழை.

kandathai sollugiren சொன்னது…

கவிதைன்னா இது கவிதை!
மணலன்றி வேறெதுவும் கண்டறியா
வைகை கூட
நீர் நிரப்பி நிரூபித்தது
தான் ஆறென்று.
நிஷாந்தன் நீர் நீடுழி வாழ்க
சக்தி/ ரயில்வே

நிஷாந்தன் சொன்னது…

திரு.சம்பத் குமார் அவர்களுக்கு,

நன்றி நண்பரே !

நிஷாந்தன் சொன்னது…

திரு.சக்தி அவர்களுக்கு,

வைகை வரியால் வசீகரிக்கப்பட்ட உங்கள்
பாராட்டு வரிகளுக்கு நன்றி நண்பா !

நிஷாந்தன் சொன்னது…

தமிழ்செல்வி அவர்களுக்கு,

மழை குறித்த கவிதையை
கவிதை மழையென்று வர்ணித்த
பாராட்டுக்கு நன்றிகள் !

கருத்துரையிடுக