திங்கள், 27 டிசம்பர், 2010

மனுஷ்யபுத்திரனின் புதிய கவிதை நூல்

                                                                        


கடந்த பதிவுக்கும் இந்தப் பதிவுக்குமிடையே ஏறத்தாழ பத்து நாட்கள்.

 நீ........ண்ட இடைவெளிதான்.

காரணம், ஒரு பிரமிப்பான  அனுபவம்.

சாருவின்  ஏழு நூல்கள் வெளியீட்டுவிழா பற்றிய எனது பதிவு charuonline  வலைப்பக்கத்தில் இடம் பெற்றதுதான் தாமதம், மள மள வென்று குவியும் அரசியல்வாதிகளின் ஊழல்கள் போல , எனது வலைப்பக்கத்திற்கு திரை கொள்ளா அளவிற்கு விசிட்டர்கள். மூன்று செகண்டிற்கு முன்பு நியூயார்க்கிலிருந்து... பத்து செகண்டிற்கு முன்பு கோலாலம்பூரிலிருந்து... ஒரு நிமிடத்திற்கு முன்பு லணடனிலிருந்து ..என்று மொய்த்துத் தள்ளிவிட்டர்கள். அப்போதுதான் பூகோளப் பந்து முழுவதுமாய்  விரிந்து பரந்திருக்கும் சாருவின் ரசிகப் பட்டாளத்தின் முழு வீச்சையும் பிரமித்து உணர முடிந்தது, சாரு சார், உங்கள் ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு எஸ்.எம்.எஸ் தட்டிவிட்டால் கூடப் போதும் , நோபல் கமிட்டி அலறியடித்துக் கொண்டு உங்களுக்கு நோபல் பரிசு அறிவித்து விமான டிக்கட்டையும் அனுப்பிவிடும். ( உங்களுக்குதான்  விமானப் பயணம் என்றால் மிகவும் இஷ்டமாயிற்றே!)

ஓகே, விஷயத்திற்கு வருவோம் ..,

நேற்று மனுஷ்யபுத்திரனின் ` இதற்கு முன்பும், இதற்கு பிறகும்' கவிதை நூல் வெளியீட்டு விழா, தேவநேயப் பாவாணர் அரங்கில் .

வாசலில் உபசரிக்கப்பட்ட சமோசாவையும், தேனீரையும் தாண்டி அரங்கினுள்  நுழைந்தால்... அரங்கு கொள்ளா கூட்டம். மனுஷ் சாரின் முகத்தில் சூரியப் பிரகாசம் !

உயிர்மை பதிப்பகம் சார்பில் வரவேற்றுப் பேசிய லல்லி, 11 மாதங்களின் இடைவெளியில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு இது என்று தெரிவித்தார்.

நூல் வெளியீட்டுக்குப் பின் முதல் ஆளாக உரையாற்ற வந்த  எஸ்.ராமகிருஷ்ணன்நூல் வெளியீடு மட்டுமே தனக்கு இடப்பட்ட பணி என்றும் , தான் ஐந்து நிமிடம் மட்டுமே பேசப் போவதாகவும் தெரிவித்து ஒட்டு மொத்த ஆடியன்சையும் அப்செட்டாக்கினார்.

வாழ்வின் அபத்தத்தைக் கவிதைகள் மூலம் பதிவு செய்த அற்புதக் கவிஞர்களான பாரதி, ஞானக்கூத்தன், பிரமிள், ஆத்மாநாம் ஆகியோர் அடங்கிய வரிசையின் உச்சமாக மனுஷ்யபுத்திரன் திகழ்வதாகத் தெரிவித்தார். வெறும் உபசார வார்த்தைகள் அல்ல அவை. ஏனெனில் உபசாரத்திற்காகப் பேசக் கூடியவர் அல்ல எஸ்.ரா.

தொடர்ந்து பேச வந்த நா.முத்துக்குமார் , மனுஷ்யபுத்திரன் பல புதிய தளங்களில் எழுத வந்திருப்பதாக சிலாகித்து  , தனக்குப் பிடித்த ` ஒரு சுடரை வைத்துக்கொண்டு' கவிதையை வரிக்கு வரி ஆய்வு செய்து பாராட்டிமுத்தாய்ப்பாக 2011 ல் மனுஷ்யபுத்திரன் ஒரு நாவல் எழுத வேண்டுமென்ற `வேண்டுகோள் வெடிகுண்டு' ஒன்றை வீசிவிட்டு நாற்காலிக்குத் திரும்பினார்.

அடுத்து உரையாற்ற வந்தார் தமிழச்சி தங்கப்பாண்டியன்.

புதிய கவிதைகள் தன்னைப் பிய்த்துப் போட்டு மீண்டும் ஒன்று சேர்த்ததாகக் குறிப்பிட்டார்.

இதுவரை இல்லாத வழக்கமாக மனுஷ்யபுத்திரனை ஒருமையில் அழைக்கப் போவதாக பிரகடனம் செய்து சபையோரை திடுக்கிடச் செய்தார். " நாங்கள் எல்லோரும் எங்களைப் பற்றியே எழுதிக் கொண்டிருக்கும்போது , சமுதாயத்தின் எல்லாப் பிரதிநிதிகளைப் பற்றியும் எழுதுவதற்கு இவனுக்கு (!) மட்டும் எங்கிருந்து பேனா கிடைத்தது ? " என்றார். தொடர்ந்து , தொகுப்பில் தனக்குப் பிடித்த கவிதைகளைப்  பட்டியலிடத் தொடங்கினார்அப்போதுதான் கவனித்தேன், புத்தகத்தின் ஏராளமான பக்கங்களில் கற்றை கற்றையாய்  புக் மார்க் . பிடித்த எல்லாக் கவிதைகளையும் வாசிக்க இயலவில்லை என்ற விசனத்துடன் உரையை நிறைவு செய்தார்

மனுஷ்யபுத்திரனின் கவிதை நூல் ஆயிரம் மூட்டை மல்லிகை மலர்களிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு துளி வாசனைத் திரவியத்திற்கு சமம்  என்ற சாரம் மிகுந்த பாயிண்ட் ஒன்றைப் பரிசளித்து விட்டுப் பெவிலியன் திரும்பினார் இயக்குநர் வசந்த பாலன்.

சபை கல கலக்க, கைதட்டல் தூள் கிளப்ப அடுத்துப் பிரசன்னமானார் சாரு.  (இவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஒரே ஜாதகமா என்ன, அப்படி ஒரு charismatic image , மகா ஜனங்களுக்கு மத்தியில் ! ).

'பாப்லோ நெரூடா, பில்கே இவர்கள் கவிதைகளைவிட உங்கள் கவிதைகள் பிரமாதம்' என்று ஒரு குறுந்தகவல் அனுப்பினாராம் மனுஷ்யபுத்திரனுக்கு. அதற்கு வந்த பதிலில் நொந்து விட்டாராம். பதில் இதுதான் - ` உங்கள் அன்புக்கு நன்றி '.  ஆத்மாநாம், நகுலன், பிரமிள், அசோகமித்திரன் போன்ற கவிஞர்களை முப்பந்தைந்து வருடங்களாகக் கொண்டாடுகிறேனே அந்த பரந்து பட்ட வாசிப்பின் விளைவுதான் அந்தப் பாராட்டே தவிரவெறும் அன்புக்காகப் பாராட்டுபவன் நானல்ல என்று ஆணித்தரமாக அறிவித்தார்.

பாப்லோ நெரூடாவை இங்கே கொண்டாடுகிறோம், இது போல் சிலியில் மனுஷ்யபுத்திரனைக் கொண்டாடுவார்களா என்று வேதனை வினா எழுப்பினார்.

`பணி நீக்க உத்தரவு' என்ற கவிதையை மிக அழகாக வாசித்துக் காட்டினார்.

                        துணி துவைப்பதற்காக
                        விடுமுறை நாட்களுக்குக்
                        காத்திருக்க வேண்டியதில்லை

என்ற வரிகளை உச்சரித்துவிட்டு 'இதெல்லாம் உனக்கு எப்படிடா தெரிஞ்சது? ' என்று மனுஷ்யபுத்திரனைப் பார்த்து கேட்ட கேள்வி நட்பின் கிளைமாக்ஸ்.

கவிதைப் புத்தகம்  கடவுளும் , சாத்தானும்  சேர்ந்து எழுதிய தொகுப்பு என்று வர்ணித்தது வித்தியாசம்.

சாரு பேசிவிட்டு அமர்ந்ததும் , அரங்கேறியது நிகழ்ச்சி  நிரலில் இல்லாத ஒரு நிகழ்வு.

உயரமாக , டி சர்ட் அணிந்த ஒரு மனிதர் மேடைக்கு வந்து மைக் பிடித்துப் பேசத் தொடங்கினார். என்ன பேசுகிறார் என்று கிரகிப்பதற்குள் சடாரென்று ஒரு காரியம் செய்தார். வேக வேகமாக சர்ருவின் அருகில் சென்று , அவர் கையைப் பிடித்து ( டென்ஷன் ஆகாதீர்கள் ..) பிறகு அவர் விரலைப் பிடித்து  (ஐயோ, நான் தான் சொன்னேனே , டென்ஷன் ஆக வேண்டாம்னு)...பள பளவென்று ஒரு தங்க மோதிரத்தை அணிவித்தார் . அரங்கமே ஸ்தம்பித்தது, சாரு உள்பட. பகலாக இருந்திருந்தால் , பறக்கின்ற பறவைகளெல்லாம் ஒரு நொடி நிறுத்தி  , பிறகு மீண்டும் பறந்திருக்கும், அலைகளெல்லாம் ஒரு பிரேக் போட்டு மீண்டும் ஆர்ப்பரித்திருக்கும் - பாரதிராஜா படம் போல ! )

தொடர்ந்து பேச வந்த பிரபஞ்சனை `மோதிர அணிவிப்பு உற்சவம்ரொம்பவே பாதித்துவிட்டது. ` அடடா, யாராவது ஒரு பத்து மோதிரத்தோடு வந்துமேடையிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் அணிவித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ' என்று ரொம்பவே அங்கலாய்த்து விட்டு , அரை குறை மனதோடு சப்ஜக்டிற்கு வந்தார்.

பிரென்ச் எழுத்தாளர் மார்கரட் தூராசிடம் அந்நாட்டின் ஜனாதிபதி அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுக் காத்திருந்ததை எழுத்தாளர்களின் பொற்காலம் என்று வர்ணித்தார்.

மார்கரெட் தூராசுக்கும், தால்ஸ்தாவெஸ்கிக்கும் இடைப்பட்டவர் மனுஷ்யபுத்திரன் என்று அளவிட்டார். அவருடைய படைப்புகள் ஞானபீட சிபாரிசுக்குத் தகுந்தவை என்ற சிபாரிசோடு விடை பெற்றார்.

கூட்டத்தில் பேச மறுப்பதற்குத் தன்னிடம் நூறு காரணங்கள் இருந்தாலும் , விரும்பி வந்ததாக பாரதி கிருஷ்ணகுமார் தனது சிறப்புரையைத்  துவக்கினார். எப்போதும் கம்பீரமான குரலில், ஆணித்தரமான கருத்துக்களை சபை முன்னர் உலவ விட்டு வசீகரிக்கும் இவரது  ஸ்டைல் ஏனோ இப்போது மிஸ்ஸிங் . நிறைய சிரிப்புத் தோரணங்களோடு , தனக்குப் பிடித்த கவிதைகளைப் பட்டியலிட்டு முடித்தார்.

நிறைவாக ஏற்புரை ஆற்ற வந்த மனுஷ்யபுத்திரனின் உரை உண்மையிலேயே நிறைவான ஒன்று.

`நீங்கள் மிகச் சிறந்த எழுத்தாளர் ஆக வேண்டுமெனில்இந்த நாளை இன்றோடு மறந்து விடுங்கள்' என்று தனக்கு  சன்ஸ்கிருதி சம்மான் விருது வழங்கப்பட்ட அன்று  எழுத்தாளர் விக்ரம் சேத் குறிப்பிட்டதை நினைவு கூர்ந்தார்.

" நான் செய்த வேலைக்கான அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவே  தோன்றுகிறது " என்று தன்னடக்கத்துடன் குறிப்பிட்டுக் கூட்டத்தை நிறைவு செய்தபோது அரங்கிலிருந்த நாற்காலிகள் ஒன்று கூட காலி இல்லை.

நவீன இலக்கியத்திற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் கூட்டத்தில் பேசிய  எல்லோருக்குமே இருந்ததைக் கண்கூடாகக் காணமுடிந்ததுஅங்கீகாரத்தை எதிர்பார்ப்பதற்கு முன் , அதனை அறிமுகம் செய்யும் பணியினை செய்வது நமது கடமையில்லையா ?

 இளைஞர்களிடம் - குறிப்பாகக் கல்லூரி மணவர்களிடம் பயிற்சி முகாம்கள் மூலமாக நவீன இலக்கியத்திற்கான அறிமுகப் படலத்தைத் தொடங்கலாமே !

நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும், அதிக செலவில்லாத வகையில், சிறு சிறு உள்ளரங்குக் கூட்டங்கள் மூலம் அறிமுகப்படுத்தலாமே !

கொஞ்சம் கொஞ்சமாக பர்கர்களின் சுவையும் , பிட்சாக்களின் சுவையும் இளைய தலைமுறைக்குப் பிடித்துப் போய்விட்ட நிலையில் , இனிய தமிழ் இலக்கியங்கள் மட்டும் பிடிக்காதா என்ன ?

முன்னோடி எழுத்தாளர்கள் சிந்திப்பார்களாக !



புதன், 15 டிசம்பர், 2010

சாருவின் ஏழு புதிய நூல்கள்



டிசம்பர் 13 , மாலை .

உயிர்மையின் பதிப்பில் சாரு நிவேதிதா எழுதிய ஏழு நூல்களின் வெளியீட்டு விழா - தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில்.

குவிந்திருந்த இருசக்கர வாகனங்களுக்கிடையே என்னுடையதையும் சங்கமித்து, ஹெல்மெட்டை எல்லாம் வல்ல இறைவனின் பாதுகாப்பில் பத்திரப்படுத்தி விட்டு அரங்கத்துள் பாய்ந்தேன்.

அரங்கின் முன் பகுதியில் திரளாகக் கூட்டம் இருந்தாலும், பின் பகுதியில் மக்காச் சோளக் கதிரைக் கடித்த மாதிரி ஆங்காங்கே  காலி இருக்கைகள்.

அப்போதுதான் வரவேற்கத் துவங்கியிருந்தார் கவிஞர் மனுஷ்யபுத்திரன். காலி இருக்கைகள் அவரை நிறையவே உறுத்தியிருக்கக் கூடும். கலாச்சார வறுமையின் குறியீடே காலி இருக்கைகள் என்று வேதனைப்பட்டார். மெரினாவின் ஜனத்திரளுக்கிடையே விழா நடக்குமளவுக்கு ரசனை வளர வேண்டுமென்ற ஆவலையும் வெளியிட்டார்.

இலக்கியத்தையும், இசையையும் போற்றி வளர்க்கும் சென்னையின் சடையப்ப வள்ளலாம் நல்லி  குப்புசாமி செட்டியாரின் தலைமை உரை  கன கச்சிதம்.

சாரு எழுதிய  தேகம், ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி, சரசம்-சல்லாபம்-சாமியார், கனவுகளின் நடனம், கலையும் காமமும், மழையா பெய்கிறது, கடவுளும் சைத்தானும் ஆகிய ஏழு நூல்களை செட்டியார் வெளியிட , சாருவின் நண்பர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

சரசம்-சல்லாபம்-சாமியார் ( நித்தியானந்தர் குறித்து ) நூல் விமர்சனம் செய்து பேச ரவிக்குமார்  வரும்போது அரங்கத்துள் ஏராளமான ஆரவாரம். ( சேச்சே.. சாமியாருக்கெல்லாம் ரசிகர் மன்றம் அமைந்திருக்க வாய்ப்பேயில்லை.)  வேறு யாரும் அந்த நூல் பற்றிப் பேச மறுத்துவிட்டதால் தான் அகப்பட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்ட ரவிகுமார் , நூல் பற்றிப் பேசியதைவிட தனக்கும் சாருவுக்குமிடையே நட்பு வளர்ந்த சரிதை குறித்து அதிகம் பேசி நிறைவு செய்தார்.

வழக்கம் போலவே கண்ணியமான பேச்சு தொலைக்காட்சி முன்னாள் இயக்குனர்  நடராஜனுடையது.

எந்தவொரு கூட்டத்திற்கும் கத்தை கத்தையான பேப்பர்களுடனும் , காத்திரமான கருத்துக்களுடனும் ஆஜராவது  தமிழச்சி தங்கபாண்டியனின் ஸ்டைல். ஒரு  எம்.·பில் படிப்பிற்கான  முனைப்புடன் கூடிய  தயாரிப்புகளோடு , வசீகரிக்கத்தக்க குரல் ஏற்ற இறக்கங்களோடு கருத்துக்களைப் பிசிறில்லாமல் சபை முன்னர் சமர்ப்பிக்கும் லாவகம் மல்லாங்கிணறு மகராசிக்கே கை வந்த கலை. இம்முறையும் அவ்வாறே

எந்தப் புத்தகத்தையும் இன்னும் வாசிக்கவில்லை என்ற விளக்கத்தோடு உரையைத் துவக்கினார் கவிஞர் கனிமொழி. மனுஷ்யபுத்திரனின் `கூட்டக் குறைவு' ஆதங்கத்திற்கு மருந்திடுவது போல அமைந்திருந்தது அவர் பேச்சு.

" இந்தக் கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இரு நூறு பேர் இருக்கிறார்கள்.   எந்த ஒரு நல்ல இலக்கியக் கூட்டமாக இருந்தாலும் அங்கே அவர்கள் இருப்பார்கள். அவர்களுக்குள் பேசிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஒருவருக்கொருவர் முகம் பரிச்சயமானவர்களாக இருப்பர்கள் "

கனிமொழியின் மேற்கண்ட மொழி நூறு சதவீதம் உண்மையே. எனக்குப் பக்கத்திலிருந்தவரைக் கூட அடிக்கடி பார்த்திருக்கிறேன். பெயர் தெரியாது. என்னிருக்கையிலிருந்து சற்று தள்ளி இருந்த இரானிய சிவப்பு  புன்சிரிப்பரை    இறையன்புவின் ஒரு பட்டிமன்றத்தில் பேச்சாளராகக் கூடப் பார்த்த நினைவு.  

கார்ட்டூனிஸ்ட் தனின் பேச்சு தொடக்க முதலே படு சுவாரஸ்யம்.  " மேடையில் அமர்ந்திருக்கும் .." என்று சம்பிரதாயமாக விளித்து விட்டு , மேடையில் வீற்றிருந்த காலி நாற்காலிகளை ஒரு லுக் விட்டு சிரித்தார் பாருங்கள் - நகைச்சுவையின் உச்சம்

சீரியஸ் மூடில் இருந்த கூட்டத்தை ஹாஸ்ய மூடுக்கு வெகு இலகுவாகக் கொண்டு வந்த தன், வெகு ஜன ஊடகங்களில் பணியாற்றியதால் தம்மால் நளினமாகத்தான் விமர்சிக்க முடிகிறது என்று லேசாகக் குறைப்பட்டுக்  கொண்டார். இடையிடையே மிஷ்கினின் நந்தலாலாவைப் பாராட்டினார். (மிஷ்கின்ஜி, உங்களுடைய கருப்புக் கண்ணாடி ஐடியா சூப்பர் .மேடைப் பேச்சை  ரசிக்கிறீர்களா அல்லது அசந்து தூங்குகிறீர்களா என்று தொகுப்பாளினியால் கூட கண்டு பிடிக்க முடியாது ).

தனது முறையில் ஏச வந்த.. மன்னிக்கவும், பேச வந்த மிஷ்கினின் உரை ஒரு நெடிய ராகமாலிகா. சாவேரியின் குளுமையும், முகாரியின் சோகமும் அதில் கலந்து கட்டி வழிந்தோடியது.`நந்தலாலாவை எல்லோரும் சீக்கிரம் பார்த்து விடுங்கள், இல்லாவிட்டால் தியேட்டரைவிட்டு ஓடிவிடும்' என்று டிப்ஸ் கொடுத்தார். படம் காப்பி என்று மொழிந்தவர்களை வசை பாடினார். தான் பட்ட சிரமங்கள் அவர்களுக்குத் தெரியாது என்று  விசனப் பட்டார்சாருவின் புத்தகத்தைத் தான் படித்துவிட்டதாக மூன்று முறை குறிப்பிட்டதன் மூலம் `தான் படிக்கவில்லைஎன்ற உண்மையை நிரூபித்து விட்டு செட்டில் ஆனார்.

வள்ளி திருமணம் நாடகத்தில் அதிகாலை இரண்டு மணிக்கு வந்து சேரும் முருகனைப் போல , கடைசியாக  விமர்சிக்க வந்தார் எஸ்.ரா. எப்போதும் போல் காந்த நாவை அவர் சுழற்றத் தொடங்கஅரங்கிலிருந்தவர்களெல்லாம் கணப் பொழுதில் இரும்புத் துண்டுகளாய்   ஈர்க்கப்பட்டார்கள் - ஒட்டு மொத்தமாக.

 வாதை குறித்து அவர் பிரசவித்த சொற்கள் மீண்டும் மீண்டும் மனதிற்குள் கொணர்ந்து அசை போட வைக்குமளவுக்கு சாரம் மிகுந்தவை. எழுத்தாளர் ஜி.நாகராஜன் தனது மது அடிமைப் பழக்கத்தால்  எதிர் கொண்ட வாதையின் உக்கிரம் குறித்து அவர் விளக்கியபோது தேகம் சிலிர்த்தது நிஜம். எழுத்தாளன் அவமானங்களைக் கண்டு அஞ்சுவதில்லை, மாறாக அவமானங்ளை விருப்பத்துடன் தேடிச் செல்கிறான் என்ற விவாதத்துக்குரிய சிந்தனையைத் தெளித்து , மிகுந்த அப்ளாஸ்களை அள்ளிச் சென்றார்.

நிறைவாக நன்றி சொல்ல வந்தார் சாரு. இப்போதுதான் மணி ஏழு என்பது போன்ற ஒரு சாவகாச தோரணையுடன் தொடங்கிய போது . முகம் முழுக்கப் பெருமிதமும், உரை முழுக்க உற்சாகமும் தாண்டவமாடியது. ` முக்கியமான ஒரு விஷயம் - ஆனா மந்து போச்சு ' என்ற நகைச்சுவை முந்திரிப் பருப்புகள் ஆங்காங்கே மிளிர, நல்ல காரமான  மிக்சர் உரை. வழக்கம் போல கேரள நன்மக்கள் போற்றப்பட்டார்கள். தமிழ் ஊடகங்கள் திட்டப்பட்டார்கள். பேச்சின் நடுவே வாய் தவறி தனது வயது ஐம்பது ப்ளஸ்  என்று சொல்லிவிட்ட அந்த இருபது ப்ளஸ் சாரு உரையை நிறைவு செய்த சமயம் , இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாமோ என்று நாம் எண்ணிய போது  நேரம் பத்து மணியைத் தாண்டியிருந்தது.   

வெளியில் வரும்போது யாரோ அதிசயத்து சொன்னார்கள் ` அட, ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்கு  இவ்வளவு கூட்டமா '.

உண்மைதான் 

அது சேர்க்கப்பட்ட கூட்டமல்ல  - சாருவால் ஈர்க்கப்பட்ட கூட்டம்








சனி, 11 டிசம்பர், 2010

ஹைக்கூ ஒன்று . . . .


                                                                        அடுப்பு

                                                            இடிந்த மாளிகைக்குள்

                                                            எரியும் அடுப்பு


                                                            தொழிலாளியின் சமையல்



புதன், 8 டிசம்பர், 2010

மழை நேரத்துக் கட்டஞ் சாயா


கேரள நன்னாட்டைக் கடவுளின் சொந்த தேசம் என்று சொல்லுவார்கள். உலகத்தைப் படைத்த பிறகு மிஞ்சிய பச்சை வண்ணம் அத்தனையயும் கடவுள் கேரள தேசத்தில் கொட்டி அழகுபடுத்தி விட்ட மாதிரி அப்படி ஒரு பச்சைப் பசேல் தேசம்.


பெருமழைக் காலம் என்றழைக்கப்படும் சூன் முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் சொல்லாமல் கொள்ளாமல் விசிட் அடித்து பரவசப்படுத்தும் மழை ஓர் அற்புதம்.  எங்கு பார்த்தாலும் பச்சை.பச்சை .. மேலும் பச்சை. தரையின் இண்டு இடுக்கு எல்லாம் செடி, கொடிகளால் செழித்திருப்பது ஒரு அழகு என்றால் , கட்டிடங்களின் மதில் சுவரெல்லாம் பாசி மாதிரியான தாவரங்கள் படர்ந்து பசும் சுவர்களாகக் காட்சியளிப்பது இன்னுமோர் அழகு. அதற்கு  நடுவே வயலட் நிறத்தில் குட்டி    குட்டியாய் பூக்கள் பூத்திருப்பது அழகோ அழகு. சுவர்ப் பூக்கள் ! ( கவிதை எழுதுங்கப்பா ...).

விவரிக்க வந்த செய்தி - கட்டஞ் சாயாவைப் பற்றி....

முதல் இரண்டு பாராவிலும் சிலாகித்திருந்த மலையாள தேசத்தின் தலை நகரான திருவனந்தபுரத்தின் அருகிலுள்ள கோவளம் கடற்கரைக்கு நண்பர் பரிமள செல்வத்துடன் சென்றிருந்த தினம் அது.

சுற்றுலா வந்திருந்த அயல் நாட்டுக் குடிமக்களின் விழிகளை ஒத்திருந்த நீலத்தில் - ஸ்படிகம் போன்ற கடல் நீர்.

இன்னும் , இன்னும் என்று ஆசையைத் தூண்டும் அருமையான குளியல்.

அந்த நேரத்தில் , சடாரென்று ஸ்விட்ச் போட்டாற்போல் தொடங்கியது மழை.

கேரளத்துப் பெருமழை பற்றிய முன் அனுபவம் இல்லாத காரணத்தால் வாரிச் சுருட்டிக் கொண்டு கரையை நோக்கி ஓடினோம்.

தென்னை ஓலைக் கூரையுடன் கூடிய ரெஸ்டாரண்ட் அடைக்கலம் தந்தது.

பற்கள் தந்தியடிக்கும் வசீகரக் குளிரில் திளைத்திருந்த நேரத்தில் , உணவகப் பணியாள் ஆர்டர் கேட்டு வந்தார். ஆம்லெட்டும் , டீயும் ` பறைந்து' விட்டு மீண்டும் பற்களால் தந்தியடிக்கத் துவங்கினோம்.

சற்று நேரத்தில் ஆம்லெட் வந்தது. அத்துடன்  பால் இல்லாத டீயும். அங்கு அதற்குப் பெயர் கட்டஞ் சாயா .

ஒரு விள்ளல் ஆம்லெட்டுடன் ஒரு வாய் கட்டஞ் சாயா பருகத் தொடங்கிய அந்த உன்னதமான பொழுதில் எங்களுக்குப் பின்னாலிருந்த கனத்த ஸ்பீக்கரிலிருந்து ஒலிக்கத் துவங்கியது தேனினும் இனிய குரலில் ஜேசுதாசின் மலையாளப் பாடல் ஒன்று.

ஆஹா... என்ன உத்தமமான கணம் அது..

மேனி குளிரும் மழை - சூடான மற்றும் சுவையான ஆம்லெட் - நா பொறுக்கும் சூட்டில் கட்டஞ் சாயா - இதயத்தைத் தொடும் இனிமையான பாடல் !

வருடங்கள் பல கடந்து போன பின்பும் , இன்னும் கட்டஞ் சாயாவை எங்கு பார்த்தாலும் உள்ளத்தில் அலையடிக்கும் உன்னதமா பொழுது அது.

நண்பர் ஆல்பர்ட் மனோகரின் ஆலோசனைப்படி இப்போது கட்டஞ் சாயா உணவுப் பழக்கத்தின் ஒரு பகுதியாகவே மாறி விட்டது.

அருமையான கட்டஞ் சாயா தயாரிக்கும் கலையை உங்களுக்கும் சொல்லித் தருகிறேன்.

 * ஒரு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க விடவும்.

* அரை டீஸ்பூன் டீ தூளைப் போட்டு பாத்திரத்தை மூடி ,  அடுப்பை அணைத்து விடவும்.

* பத்து நிமிடம் கழித்து வடிகட்டவும்.

* சுவைக்கேற்ப சீனி மற்றும் எலுமிச்சை சாறு சேர்ப்பது நேயர் விருப்பம்

* இப்போது சுவையான கட்டஞ் சாயா தயார்.

* உங்கள் தயாரிப்பின் நேர்த்தியை அறிய ஒரு டெஸ்ட் : கண்ணாடி டம்ளரில் கட்டஞ் சாயாவை நிரப்பி மேசையின் மீது வைத்து சாயா வழியே நோக்கினால் மேசையின் பரப்பு தெளிவாகத் தெரிய வேண்டும்.

 சூடான ஆம்லெட்டையும், ஜேசுதாஸ் பாடலையும் ஏற்பாடு செய்து கொள்ள  வேண்டியது உங்கள் பொறுப்பு .

உன்னதமான பொழுது உங்களுக்கும் அமைய வாழ்த்துக்கள் !

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

மழை குறித்து...


கடலில் தோன்றிய காற்றழுத்தக் குறைவு காரணமாக தமிழ் நாடெங்கும் வெள்ளக்காடு.

இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்ற அறிவிப்பு இரண்டிரண்டு நாட்களாக நீடித்துக் கொண்டே போகிறது.

பள்ளிக் குழந்தைகளெல்லாம் தொலைக் காட்சிப் பெட்டியின் முன் ஆஜர். வானிலை ஆராய்ச்சி நிபுணர் ரமணன் அங்கிள் பள்ளிக் கூட விடுமுறை அறிவிப்பு வெளியிடுவதால் மாணவ சமுதாயத்திற்கு இப்போதெல்லாம் அவர் மீது கொள்ளைப் பிரியம்.

மழை குறித்து ஒரு கவிதை......

எப்போதும் போல் அது
வெகு சாதாரணமாகத்தான் தொடங்கியது
சிறு சிறு துளிகளாய்..

முன்னறிவிப்பில்லா விடுமுறையில்
தொலைந்து போனது சூரியன்

ஆகாயத்தையும் தரையையும்
இடையறாது பின்னிப் பிணைக்கும்
நூலிழைகளாய் மழைத்துளிகள்

மணலன்றி வேறெதுவும் கண்டறியா
வைகை  கூட
நீர் நிரப்பி நிரூபித்தது
தான் ஆறென்று.

கரையோர அலைகளையும்
படகுகளையும் அளவளாவ விட்டு விட்டு
குடிசைகளுக்குள் முடங்கிப் போனார்கள்
மீனவர்கள்

தாழ்வான சாலைகளில்
பாய்ந்தோடும் சாக்கடை நீரில்
சிக்கித் தத்தளித்தபடி
நகரப் பேருந்துகளெல்லாம்
நகராப் பேருந்துகளாய்...

நகரம்  மிதந்து கொண்டிருக்கும் செய்தியை
நனைந்து வந்து செப்பின
தினசரி செய்தித் தாள்கள்

இடிந்த கட்டிடங்களின் எண்ணிக்கையையும்
மூழ்கிய பயிர்களின் ஏக்கராக் கணக்கையும்
திரும்பத் திரும்பத் தெரிவித்தன
ஊடகங்கள் .

ஆனால்

எவருக்கும் தெரியவேயில்லை -

எங்கள்  எதிர்  வீட்டுத் தென்னை மரத்தில்
எப்போதும் உறங்கும் காக்கை
இரவாகியும் ஏன் வரவில்லையென்று .

ஞாயிறு, 21 நவம்பர், 2010

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி

கம்பீரமான மீசைக்கும், கட்டுக்கடங்காத சுதந்திரமான நடைக்கும் சொந்தக்காரர் எழுத்தாளர் ஜெயந்தன் அவர்கள்.

தெளிந்த நீரோட்டம் போன்ற அவருடைய எழுத்துசிறுகதை மற்றும் நாடகங்கள் மூலம் தமிழ் பேசும் நல்லுலகில் பலருக்கும் பரிச்சயமானதும், பிரியமானதும் கூட !

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், நண்பர்களுடன் அறிவார்ந்த செய்திகளைப் பகிர்ந்து கொண்டு மனதிற்குப் பிடித்த வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளின் காரணமாக சொந்த ஊரான மணப்பாறைக்குக் குடியேறியவர்.

மணவைத் தமிழ் மன்றத்தின் புரவலர் திரு.சௌமா.ராசரத்தினம் அவர்களின் ஒத்துழைப்போடு `சிந்தனைக் கூடல் ' என்ற அமைப்பைத் துவக்கினார்தனது இறுதி மூச்சு வரை அதை சிறப்பாக நடத்தி தனது மணவை குடியேற்றத்திற்கான நோக்கம் நிறைவேறிய திருப்தியையும் , ஒரு புது விதமான இலக்கிய சுகத்தினை மணப்பாறை நண்பர்களுக்கு அளித்த பெருமையையும் ஒரு சேரப் பெற்றார். அவர் எழுதிக் கொண்டிருந்த புதினம் முழுமை அடையும் முன்பே நிகழ்ந்து விட்ட அவருடைய எதிர் பாராத மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பெரும் இழப்பே !.

ஜெயந்தன் அவர்களின் நினைவாக இலக்கிய பரிசுப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது மணப்பாறை செந்தமிழ் அறக் கட்டளை.

நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுக்கும் போட்டி இது.

இது பற்றி கவிஞர் மனுஷ்ய புத்திரன் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் தெரிவித்த சிறந்த கருத்து இது:

" போட்டிக்கான படைப்புகள் வந்து சேர வேண்டுமென்று காத்திருப்பது கூ அவசியமில்லை. படைப்பாளிகளிடம் கேட்டு வாங்கியும் போட்டியில் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் பல நல்ல எழுத்தாளர்கள் ரிசு கேட்க கூச்சப்பட்டு போட்டியில் கலந்து கொள்ளாமலிருக்கும் வாய்ப்பு உண்டு ".

நியாயம்தான்.

தன்னடக்கம் காரணமாக நல்ல படைப்புகள் சபைக்கு வராமல் போகுமேயானால் இழப்பு இலக்கிய வளர்ச்சிக்குதான்.

ஆகவே நண்பர்களே, உங்களுக்கு அறிமுகமான  படைப்பாளிகளிடம்  போட்டி குறித்துத் தெரிவியுங்கள் !

சிறந்த படைப்புகள் கௌரவிக்கப்படும் பொழுதில் ஜெயந்தன் அவர்களின் ஆத்மா மகிழ்ச்சி பெறட்டும்!

போட்டியின் விவரங்கள்:

* ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி

*நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் 2010 ஆம் ஆண்டு வெளியான நூல்கள் போட்டியில் பங்கேற்கலாம்.

*ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை ரூ.10,000 வழங்கப்படும்.

*நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும்.

*நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 31-01-2011

 *அனுப்ப வேண்டிய முகவரி

கவிஞர். தமிழ்மணவாளன்
18, பத்மாவதி நகர்
மாதவரம் பால் பண்ணை
சென்னை-600 051