சனி, 26 மார்ச், 2011

நேற்றைப் போலவே... ( கவிதை ஒன்று )







                  
என் அறையை இன்னும் கொஞ்சம்
நேர்த்தியாக அமைக்க விரும்பினேன் -

நகரத்திலிருக்கும் ஒரு பல் மருத்துவரின்
வரவேற்பறையைப் போலவே .

என் ஆடைகளை இன்னும் கொஞ்சம்
நேர்த்தியாக அணிய விரும்பினேன் -

முதன் முதலாக நேர்முகத் தேர்வை
எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின்
ஆடையைப் போலவே.

என் மனத்தை இன்னும் கொஞ்சம்
இலேசாக்க விரும்பினேன் -

பால் குடித்து முடித்தபின்
தாயின் முந்தானைக்குள்
உறங்கத் துவங்கும் ஒரு சிசுவைப் போலவே .

என் குரலை இன்னும் கொஞ்சம்
மிருதுவாக்க விரும்பினேன் -

பெண் பார்க்கும் நிகழ்வில்
அவன் கேட்கும் கேள்விகளுக்கு
அவள் தரும் பதில்களைப் போலவே.

என் புத்தகங்களை இன்னும் கொஞ்சம்
சீராக அடுக்க விரும்பினேன் -

ஒரு பழக்கடைக் காரனின்
தட்டுகளில் அடுக்கப்படடிருக்கும்
ஆப்பிள்களைப் போலவே .

இவையெல்லாவற்றையும்
உடனடியாக செயல்படுத்த விரும்பினேன் -

நேற்றைக்கும் அதற்கு முன்பும்
விரும்பியது போலவே .

வியாழன், 24 மார்ச், 2011

இந்தியா ஜெயிச்சாச்சு...


இரவு பத்தரை மணிக்கு சென்னை நகரெங்கும் பட்டாசு முழக்கங்கள்.. ! (தீபாவளி முன் கூட்டியே வந்துடிச்சா என்ன  ? )

அதெல்லாம் ஒண்ணுமில்லே ...! ஹுர்ரே....உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில்  இந்தியா ஆஸ்திரேலியாவை ஜெயிச்சாச்சு...

ஸ்வீட் எடு..கொண்டாடு...!

யாரங்கே... யுவராஜுக்கும் , ரெய்னாவுக்கும் திருஷ்டி சுத்திப் போடுங்கப்பா .

தோணியாக வந்திருந்து நமது பெருமை மிகு இந்திய அணியைக்  கரை சேர்த்த காப்டன் தோனி அண்ணாத்தைக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள் !

சமத்துப் பசங்களா , மொஹாலியில் பாகிஸ்தான் பசங்களையும் கெலிச்சு அப்படியே உலகக் கோப்பைய உசத்திப் பிடிங்கப்பா !

மனசு இருந்தா மார்க்கம் இருக்கும்.

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !

திங்கள், 21 மார்ச், 2011

தலைவர்களுக்குப் புதிய பெயர்கள்


இதோ வந்தே விட்டது சட்டசபைத் தேர்தல்..!

கூட்டணிக் குஸ்திகளிலெல்லாம் ஒரு வழியாக  முடிவுக்கு வந்து , வேட்பு மனுத் தாக்கல்களும் தொடங்கியாகி விட்டது.

கொளுத்தும்  கொடிய வெயிலிலும் வாக்கு சேகரிக்க ஊர் ஊராக , வீதி வீதியாகப் புறப்பட்டு விட்டார்கள் தொண்டர்களும் , தலைவர்களும்.

அவர்களின் சுற்றுப் பிரயாணத்தில் பூத் திறப்பு விழாவும், தண்ணீர் பந்தல் திறப்பு விழாவும் தவறாமல் இடம் பெறும். அதன் ஒரு பகுதியாக குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் வைபவங்களும் நடப்பதுண்டு ( சில சமயங்களில்  வளர்ந்த குழந்தைகளுக்கும் கூட பெயர் சூட்டப்படும்  ) .

காலம் காலமாகத் தலைவர்கள்தாம் பெயர் சூட்ட வேண்டுமா என்ன, ஒரு மாறுதலுக்கு - இன்றைய சூழலுக்குத் தகுந்தவாறு அவர்களுக்கு நாம் பெயர் சூட்டி மகிழலாமே.!




படித்தீர்களா ?  ரசித்தீர்கள்தானே ?

அப்படியென்றால் கார்ட்டூன் பற்றியும் கருத்துக்கள் பற்றியும் உங்கள் அபிப்பிராயங்களைப் பின்னூட்டமிடலாமே ... கொஞ்சம் சோம்பல்படாமல்...!