திங்கள், 15 ஆகஸ்ட், 2011

இந்திய சுதந்திரத் திரு நாள்


நமது பாரதத்தின் 65 ஆவது சுதந்திரத் திருநாளின்று...

மாணாக்கர் அதி காலையிலேயே எழுந்து குளித்து , வெள்ளாடை அணிந்து , சட்டைப் பையில் மூவர்ணக் கொடி குத்தி , பள்ளிக்குச் சென்று கொடியேற்றி, விடுதலைப் பேருரை கேட்டு, ஆரஞ்சு மிட்டாய் சுவைத்து விடுமுறையைக் கொண்டாடக் கலைந்து சென்றாயிற்று. தலைவர்களும் தத்தம் பங்குக்கு முந்தின வருடங்களின் உரைகளைப் போலவே இந்த வருடமும் தவறாமல் உரை நிகழ்த்தித் தமது கடமைகளை செவ்வனே முடித்துக் கொண்டார்கள். துடைத்து மாட்டப்பட்ட காந்தி, நேரு படங்களும் மீண்டும் தமது இருப்பிடம் தேடி பரண்களுக்குச் சென்று விடும்.

எவ்வாறு கிடைத்தது இந்த சுதந்திரம் ?

இதனைப் பெற நமது தலைவர்கள் எத்தகைய வலிகளை மேற்கொண்டார்கள் ?

என்னென்ன போராட்டங்களில் பங்கேற்றார்கள் ?

ஆங்கிலேய அரசின் அடக்குமுறைகளை எவ்வாறெல்லாம் எதிர் கொண்டார்கள் ?

பிரதி பலனை எதிர் பாராமல்  எத்தகைய தியாகங்களை  செய்தார்கள் ?

ஆண்டுகள் அறுபத்து நான்கு ஆகிவிட்டபடியால் நம்மில் பலருக்கு மேல் குறிப்பிட்ட கேள்விகளுக்கு விடையே தெரிவதில்லை.



தென்னாப்பிரிக்காவில் வெள்ளையனால் ரயில் பெட்டியிலிருந்து வெளியே தள்ளப்பட்டு பிளாட்பாரத்தில் விழுந்த  மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி , எழுந்து நின்ற கணத்தில் கனல் விடத் துவங்கிய சுதந்திர தாகம் , 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் விடுதலையாக மலரும் வரை பாரதத் தாயின் புதல்வர்கள் பட்ட கஷ்டங்கள்தாம் எத்தனை எத்தனை.

உறுதி மனம் படைத்த குஜராத்திக் கிழவனின் ஒல்லியான கைத்தடிக்கு முன்னால் , ஆங்கிலேயனின் உருக்கு பீரங்கிகள் உருக்குலைந்து போன சம்பவங்கள் சரித்திரத்தின்  ஒவ்வொரு பக்கத்திலும் மிளிரும்.

ஆனந்த பவனத்தின் செல்லப் பிள்ளையாக உலா வந்த காஷ்மீரத்து ரோஜாவான நேருவின் தினங்கள் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் செலவிடப்பட்ட விவரங்கள் வரலாற்றின் பக்கங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளனவே.

கவிதையை சுவாசித்து, வறுமையை உண்டு `ஆடுவோமே பள்ளு பாடுவோமே ' என்று கற்பனையில் விடுதலையைக் கொண்டாடிய பாரதியின் பங்களிப்புகள் உன்னதமானவையன்றோ.

கத்தும் கடலில் கப்பலோட்டிய தமிழன் வ..சிதம்பரம் பிள்ளை சுதந்திரக் காற்றினை சுவாசிக்கப் போராடியதால் , சிறைக்குள்ளே செக்கிழுத்து மாண்ட தியாகத்திற்கும் இணையுண்டோ .

பகை விரட்டிடப் போராடி தூக்குக் கயிற்றினை முத்தமிட்ட மாவீரன் பகத் சிங்கின் வீரம் அழிந்து விடக் கூடியதல்லவே

கதரின் பெருமையினை உலகுக்குப் பறை சாற்றிய அலி சகோதரர்களின் பங்களிப்புகள் அழியாப் புகழ் பெற்றவை அல்லவா.

எதற்குத் தர வேண்டும் வரி யென எஃகு ஆங்கிலேயனிடம் எக்காளமிட்டுக் கயத்தாறில் உயிர் துறந்த கட்டபொம்மனின் தியாகம் இமயத்தினும் பெரிதன்றோ .


இவை மட்டுமா ?

பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட ஆங்கிலேய அரசாங்கம் இந்தியாவென்றும் , பாகிஸ்தானென்றும் பாரதத்தை இரு கூறாகப் பிளந்த காரணத்தால்  அன்னை பாரதத்தின் புதல்வர்கள்  குடியேற்றத்திற்காக இரயில் வண்டிகளில் பிரயாணம் செய்யும்போது வன்முறைக்கு ஆளாகி குடும்பம் குடும்பமாக மரணத்தைத் தழுவிய இரத்த சரித்திரத்தின் கொடுமைதான் என்னே .

இவையன்றி வரலாற்றின் பக்கங்களில் இடம் பெறாமல் மறைந்து பட்ட தியாகச் சம்பவங்கள் இன்னும் எத்தனை எத்தனையோ!
  
இச்சம்பவங்கள் நமக்கு உணர்த்தும் படிப்பினைதான் யாது ?

பெற்ற சுதந்திரத்தின் வலியினை உணர்ந்து கொள்வோம் நாம்.

ஈரைந்து மாதங்கள் தவமிருந்து பெற்ற தாய் தன் சிசுவை நேசிப்பது போல் , வலித்துப் பெற்ற நம் சுதந்திரத்தின் வனப்பை நாம் உணர்ந்து கொள்வோம்.

மதமாச்சரியங்களிலிருந்தும் , இன துவேஷங்களிலிருந்தும் , பிரிவினைவாதிகளிடமிருந்தும் அன்னை  பாரத்தைக் காப்பதில் அனைவரும் ஒன்று படுவோம்.

நமது தாய் திரு நாட்டின் பெருமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்த சக்தியும் நம்மை அணுகாமல் கவனமாகக் காத்திடுவோம்.

தன்னலமிக்க அரசியல்வாதிகளின் முகமூடிகளை அடையாளம் கண்டு கொண்டு அவர்களிடமிருந்து நம்மையும் நாட்டையும் பாதுகாப்போம்.

உண்மையாகவே நாட்டுக்குழைக்கும் உத்தமர்களுக்கு உறு துணையாக நிற்போம்.

சுதந்திரத்தின் பெருமையை வருகின்ற தலைமுறைக்கு தவறாமல் சொல்லித் தருவோம்.

அன்னை பாரதத்தின் பெருமை அகிலமெங்கும் ஒளி வீசிட அனைவரும் பாடுபடுவோம் !