வியாழன், 29 மார்ச், 2012

பறவைகளைப் பாதுகாப்போம் ...!


கோடைக் காலம் தொடங்கி விட்டது.
இவ்வாண்டு வெயிலின் உக்கிரம் 45 டிகிரியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 கடும் வெய்யிலின் காரணமாக குடிக்க நீரின்றி ஏராளமான பறவைகள் மடிந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. பறவைகளின் தாகம் தணித்து அவைகளின் உயிர் காக்க நமது பங்களிப்பும் அவசியம்தானே ?


நம் இல்லங்களின் முற்றங்களிலும், அடுக்ககக் குடியிருப்பின் பால்கனியிலும் சிறு பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பி வைப்போம். சில தானிய மணிகளையும் இறைத்து வைக்கலாம். 
தாகத்தோடு வரும் பறவைகள் உணவருந்தி, நீர் குடித்து மகிழ்வதுடன் நம்மையும் வாழ்த்தி விட்டு சிறகடிக்கும். 

அலைபேசி கோபுரங்களின் வருகையால் சிட்டுக்குருவி என்ற அழகிய பறவையினத்தையே நாம் அழித்து விட்டோம்.

 மீதமிருக்கும் பறவைகளையும் தாகத்தால் சாக விடக் கூடாதல்லவா ?

சனி, 17 மார்ச், 2012

ஒரு குட்டியின் பகிர்தல்
என்னேரமும் மின் வெட்டால்
ஏதுமில்லை பொழுது போக்கு

எல்லோருமே பிசியானதால்
எங்கோ போனது அன்பின் பகிர்வு

செவிமடுக்க எவருக்கும் நேரமில்லை
செப்புவதற்கு எனக்கு மனமுமில்லை

குட்டித் தூக்கம் இல்லை இது
குட்டியின் துக்கம், புரிந்து கொள்வீர் !

திங்கள், 20 பிப்ரவரி, 2012

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி*நாவல் / நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 
2011ஆம் ஆண்டு
 ( 2011 ஜனவரி முதல் டிசம்பர் வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.

*ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை ரூ 10,000 வழங்கப்படும்.

*நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும்.

*நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 31-03-2012

*அனுப்ப வேண்டிய முகவரி

தமிழ்மணவாளன்
18, பத்மாவதி நகர்
மாதவரம் பால் பண்ணை
சென்னை-600 051

செந்தமிழ் அறக்கட்டளை
மணப்பாறை

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

இந்திய சுதந்திரத் திரு நாள்


நமது பாரதத்தின் 65 ஆவது சுதந்திரத் திருநாளின்று...

மாணாக்கர் அதி காலையிலேயே எழுந்து குளித்து , வெள்ளாடை அணிந்து , சட்டைப் பையில் மூவர்ணக் கொடி குத்தி , பள்ளிக்குச் சென்று கொடியேற்றி, விடுதலைப் பேருரை கேட்டு, ஆரஞ்சு மிட்டாய் சுவைத்து விடுமுறையைக் கொண்டாடக் கலைந்து சென்றாயிற்று. தலைவர்களும் தத்தம் பங்குக்கு முந்தின வருடங்களின் உரைகளைப் போலவே இந்த வருடமும் தவறாமல் உரை நிகழ்த்தித் தமது கடமைகளை செவ்வனே முடித்துக் கொண்டார்கள். துடைத்து மாட்டப்பட்ட காந்தி, நேரு படங்களும் மீண்டும் தமது இருப்பிடம் தேடி பரண்களுக்குச் சென்று விடும்.

எவ்வாறு கிடைத்தது இந்த சுதந்திரம் ?

இதனைப் பெற நமது தலைவர்கள் எத்தகைய வலிகளை மேற்கொண்டார்கள் ?

என்னென்ன போராட்டங்களில் பங்கேற்றார்கள் ?

ஆங்கிலேய அரசின் அடக்குமுறைகளை எவ்வாறெல்லாம் எதிர் கொண்டார்கள் ?

பிரதி பலனை எதிர் பாராமல்  எத்தகைய தியாகங்களை  செய்தார்கள் ?

ஆண்டுகள் அறுபத்து நான்கு ஆகிவிட்டபடியால் நம்மில் பலருக்கு மேல் குறிப்பிட்ட கேள்விகளுக்கு விடையே தெரிவதில்லை.தென்னாப்பிரிக்காவில் வெள்ளையனால் ரயில் பெட்டியிலிருந்து வெளியே தள்ளப்பட்டு பிளாட்பாரத்தில் விழுந்த  மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி , எழுந்து நின்ற கணத்தில் கனல் விடத் துவங்கிய சுதந்திர தாகம் , 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் விடுதலையாக மலரும் வரை பாரதத் தாயின் புதல்வர்கள் பட்ட கஷ்டங்கள்தாம் எத்தனை எத்தனை.

உறுதி மனம் படைத்த குஜராத்திக் கிழவனின் ஒல்லியான கைத்தடிக்கு முன்னால் , ஆங்கிலேயனின் உருக்கு பீரங்கிகள் உருக்குலைந்து போன சம்பவங்கள் சரித்திரத்தின்  ஒவ்வொரு பக்கத்திலும் மிளிரும்.

ஆனந்த பவனத்தின் செல்லப் பிள்ளையாக உலா வந்த காஷ்மீரத்து ரோஜாவான நேருவின் தினங்கள் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் செலவிடப்பட்ட விவரங்கள் வரலாற்றின் பக்கங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளனவே.

கவிதையை சுவாசித்து, வறுமையை உண்டு `ஆடுவோமே பள்ளு பாடுவோமே ' என்று கற்பனையில் விடுதலையைக் கொண்டாடிய பாரதியின் பங்களிப்புகள் உன்னதமானவையன்றோ.

கத்தும் கடலில் கப்பலோட்டிய தமிழன் வ..சிதம்பரம் பிள்ளை சுதந்திரக் காற்றினை சுவாசிக்கப் போராடியதால் , சிறைக்குள்ளே செக்கிழுத்து மாண்ட தியாகத்திற்கும் இணையுண்டோ .

பகை விரட்டிடப் போராடி தூக்குக் கயிற்றினை முத்தமிட்ட மாவீரன் பகத் சிங்கின் வீரம் அழிந்து விடக் கூடியதல்லவே

கதரின் பெருமையினை உலகுக்குப் பறை சாற்றிய அலி சகோதரர்களின் பங்களிப்புகள் அழியாப் புகழ் பெற்றவை அல்லவா.

எதற்குத் தர வேண்டும் வரி யென எஃகு ஆங்கிலேயனிடம் எக்காளமிட்டுக் கயத்தாறில் உயிர் துறந்த கட்டபொம்மனின் தியாகம் இமயத்தினும் பெரிதன்றோ .


இவை மட்டுமா ?

பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட ஆங்கிலேய அரசாங்கம் இந்தியாவென்றும் , பாகிஸ்தானென்றும் பாரதத்தை இரு கூறாகப் பிளந்த காரணத்தால்  அன்னை பாரதத்தின் புதல்வர்கள்  குடியேற்றத்திற்காக இரயில் வண்டிகளில் பிரயாணம் செய்யும்போது வன்முறைக்கு ஆளாகி குடும்பம் குடும்பமாக மரணத்தைத் தழுவிய இரத்த சரித்திரத்தின் கொடுமைதான் என்னே .

இவையன்றி வரலாற்றின் பக்கங்களில் இடம் பெறாமல் மறைந்து பட்ட தியாகச் சம்பவங்கள் இன்னும் எத்தனை எத்தனையோ!
  
இச்சம்பவங்கள் நமக்கு உணர்த்தும் படிப்பினைதான் யாது ?

பெற்ற சுதந்திரத்தின் வலியினை உணர்ந்து கொள்வோம் நாம்.

ஈரைந்து மாதங்கள் தவமிருந்து பெற்ற தாய் தன் சிசுவை நேசிப்பது போல் , வலித்துப் பெற்ற நம் சுதந்திரத்தின் வனப்பை நாம் உணர்ந்து கொள்வோம்.

மதமாச்சரியங்களிலிருந்தும் , இன துவேஷங்களிலிருந்தும் , பிரிவினைவாதிகளிடமிருந்தும் அன்னை  பாரத்தைக் காப்பதில் அனைவரும் ஒன்று படுவோம்.

நமது தாய் திரு நாட்டின் பெருமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்த சக்தியும் நம்மை அணுகாமல் கவனமாகக் காத்திடுவோம்.

தன்னலமிக்க அரசியல்வாதிகளின் முகமூடிகளை அடையாளம் கண்டு கொண்டு அவர்களிடமிருந்து நம்மையும் நாட்டையும் பாதுகாப்போம்.

உண்மையாகவே நாட்டுக்குழைக்கும் உத்தமர்களுக்கு உறு துணையாக நிற்போம்.

சுதந்திரத்தின் பெருமையை வருகின்ற தலைமுறைக்கு தவறாமல் சொல்லித் தருவோம்.

அன்னை பாரதத்தின் பெருமை அகிலமெங்கும் ஒளி வீசிட அனைவரும் பாடுபடுவோம் !திங்கள், 11 ஏப்ரல், 2011

உடல் நலம் பெற ஓர் அற்புத பானம்


உடல் நலத்திற்கு மிகவும் நன்மை செய்யக் கூடிய அற்புத பானம் ஒன்றை நண்பர் மின்னஞ்சலித்திருந்தார்.

செய்முறை மிகவும் எளிது.. கிடைக்கும் பயன்களோ அளப்பரியன...!

பானத்தின் பெயர்: அற்புத பானம்

தேவையான பொருட்கள்: காரட் - 1, பீட்ரூட்-1, ஆப்பிள் - 1

செய்முறை: காரட், பீட்ரூட், ஆப்பிள் ஆகியவற்றை நன்றாகக் கழுவி, தோலோடு துண்டுகளாக நறுக்கி , ஜூஸரில் இட்டு சாறு பிழிந்து  அருந்தவும்.

உத்தரவதமாகக் கிட்டும் நன்மைகள்:

* புற்று நோய் செல்கள் வளருவதைத் தடுக்கிறது

* கல்லீரல், கணையம், சிறு நீரகங்கள் தொடர்பான வியாதிகள் வருவதைத் தடுக்கிறது

* வயிற்றுப் புண்ணை குணமாக்குகிறது

* நுரையீரலைப் பலப்படுத்துகிறது

* இதயத் தாக்குதல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் வருவதைத் தடுக்கிறது

* நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது

* பார்வைத் திறனை அதிகரிக்கிறது.  களைப்படைந்த கண்களுக்கும் , உலர் கண்களுக்கும்  நன்மை பயக்கிறது.

* தசை வலி மற்றும் உடல் வலிக்கு நிவாரணம் தருகிறது

* உடலில் சேரும் நச்சுத் தன்மையை முறிக்கிறது.

* மலச்சிக்கலை எவ்வித சிக்கலுமின்றி குணப்படுத்துகிறது

* சருமத்திற்கு பளபளப்பினைக் கூட்டுகிறது

* அஜீரணம், தொண்டைப் புண் ஆகியவற்றால் ஏற்படும் சுவாச துர்நாற்றத்தை  நிவர்த்தி செய்கிறது

* பெண்களுக்கான மாத விடாய் வலியினைக் குணமாக்குகிறது

* பக்க விளைவுகள் ஏதுமில்லை

* சத்து மிகுந்தது - எளிதில் உடலில் சேரக் கூடியது

* எடைக் குறைப்பிற்கு உதவுகிறது

* இரண்டு வார கால உபயோகத்திலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

அருந்தும் விதம்

- காலையில் வெறும் வயிறில் அருந்தவும்.

- சாறு பிழிந்த உடனேயே அருந்துவது மிகுந்த நன்மை தரும்

- அருந்திய பின்  ஒரு மணி நேரம் கழித்து காலை உணவு உண்ணலாம்

- அதிகப் பலன் பெற காலை ஒரு முறை, மாலை 5 மணிக்கு முன்பு ஒரு முறை என இரண்டு வேளைகள் அருந்தலாம்

குறைந்த செலவில் நிறைந்த பலன் களை வாரி வழங்கும் அற்புத பானத்தை நீங்கள் உடனே அருந்தத் துவங்குங்கள்அளப்பரிய நன்மைகளைப் பெறுங்கள்..!
செவ்வாய், 5 ஏப்ரல், 2011

அன்பான வேட்பாளப் பெரு மக்களே ...!
தேர்தல் இதோ நெருங்கி விட்டது...!

வேட்பாளர்கள் சுட்டெரிக்கும்  வெயிலென்றும் பார்க்காமல் சந்து சந்தாக , தெருத் தெருவாக சுற்றி சுற்றி வாக்கு சேகரிக்கிறார்கள். அவர்களை  விடவும் சுறுசுறுப்பாக கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு பின்னாலேயே திரிகிறது தேர்தல் ஆணையம்.

எதற்காக ? அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுப்பதற்காக !

இந்த நிலைமை வந்து விட்டதற்காக உண்மையிலேயே அரசியல் கட்சிகள் கூச்சப்பட வேண்டாமா ?

ஆளும் கட்சியாக இருக்கும் பட்சத்தில் செய்த நன்மைகளைக் கூறியும், ஆளும் வாய்ப்புக் கிட்டாத கட்சிகள் ( எதிர்க் கட்சி என்பதை  இப்படி  நாசூக்காகச் சொல்லலாமே ) தங்களுக்கு ஆட்சி செய்யும் வாய்ப்பு கிட்டுமேயானால் அவர்கள் செய்யப் போகும் நன்மைகளைக் கூறியும் வாக்குக் கேட்டால் அல்லவா அங்கே ஜன நாயகம் தழைத்தோங்கும் ?

மாறாக ஒரு ஜன நாயகக் கட்டமைப்பில் எஜமானராக இருக்க வேண்டிய வாக்காளரை  யாசகராக மாற்றும் அரிய பணியைச் செய்வதற்கு எல்லாக் கட்சிகளும் முனைப்போடு வேலை செய்வதும் , அதைத் தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் என்னும் அரசுத் துறை போலீஸ் வேலை பார்ப்பதும் விரும்பத் தக்கதுதானா

இந்த  நிலை வருவதற்காகவா நமது தேசியத் தலைவர்கள் இன்னுயிர் ஈந்து சுதந்திரம் பெற்றுத் தந்தார்கள் ? இதற்காகவா அண்ணல் அம்பேத்கார் போன்ற அறிஞர்கள் நமக்கு அரசியலமைப்பு சட்டம் வடிவமைத்துத் தந்தார்கள் ?

அன்பான வேட்பாளப் பெரு மக்களே ...! உங்களுக்கொரு வேண்டுகோள் ..

இனியும் இந்த தேசத்தின் குடிமகனை  உங்களுடைய எலும்புத் துண்டுக்கு ஓடி வரும் ஞமலியாக்காதீர்கள் . உங்களுக்கு ஆட்சி உரிமை வழங்கும் அவனுக்கு உரிய மரியாதையைக் கொடுங்கள் . உண்மையிலேயே அவனுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டுமேயானால், உங்களுக்கு வழங்கப்பட்ட ஐந்து ஆண்டு காலத்திற்குள் எவ்வளவோ செய்யலாமே , அந்த வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்..தேர்தல் சமயத்தில் அவன் முகத்தில் கரன்சியை விட்டெறிந்து விட்டு ஐந்தாண்டு காலம் தொகுதிப் பக்கமே தலை வைத்துப் படுக்க வேண்டியதில்லை என்ற உங்கள் மனப் பாங்கினை சற்றே மாற்றிக் கொள்ளுங்கள் - அவனுடைய  நலம் கருதி மட்டுமல்ல், உங்களின் நலம் கருதியும்தான்.

உங்களின் கடந்த கால சாதனைகளும், வருங்காலத் திட்டங்களும் மட்டுமே வாக்காளன் முன் நீங்கள் வைக்கும் வெகுமதியாக இருக்கட்டும்.

அதனை சீர் தூக்கிப் பார்த்து வாக்காளன் அளிக்கும் தீர்ப்பில் நேர்மை மிளிரும் !

உரிய நபரைத் தேர்ந்தெடுத்தோம் என்ற நிம்மதி  வாக்காளருக்குக் கிடைக்கும் !

சரியான வகையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றோம் என்ற அற்புதமான திருப்தி உங்களுக்கு வசப்படும்  !

அதன் மூலம் உங்கள் செயல் திறன் மேம்பட்டு தேசம் பயன் பெறும் !

எத்தனையோ நாடுகளுக்குக் கிடைக்காத   ஜன நாயக உரிமை நமக்குக் கிடைத்துள்ளதே அதன் மூலமாக நமது இந்திய தேசம் உலக அரங்கில்  தலை நிமிர்ந்து நிற்கும்.

நல்லதே நடக்கும்.... நம்புவோமாக ...!


சனி, 26 மார்ச், 2011

நேற்றைப் போலவே... ( கவிதை ஒன்று )                  
என் அறையை இன்னும் கொஞ்சம்
நேர்த்தியாக அமைக்க விரும்பினேன் -

நகரத்திலிருக்கும் ஒரு பல் மருத்துவரின்
வரவேற்பறையைப் போலவே .

என் ஆடைகளை இன்னும் கொஞ்சம்
நேர்த்தியாக அணிய விரும்பினேன் -

முதன் முதலாக நேர்முகத் தேர்வை
எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின்
ஆடையைப் போலவே.

என் மனத்தை இன்னும் கொஞ்சம்
இலேசாக்க விரும்பினேன் -

பால் குடித்து முடித்தபின்
தாயின் முந்தானைக்குள்
உறங்கத் துவங்கும் ஒரு சிசுவைப் போலவே .

என் குரலை இன்னும் கொஞ்சம்
மிருதுவாக்க விரும்பினேன் -

பெண் பார்க்கும் நிகழ்வில்
அவன் கேட்கும் கேள்விகளுக்கு
அவள் தரும் பதில்களைப் போலவே.

என் புத்தகங்களை இன்னும் கொஞ்சம்
சீராக அடுக்க விரும்பினேன் -

ஒரு பழக்கடைக் காரனின்
தட்டுகளில் அடுக்கப்படடிருக்கும்
ஆப்பிள்களைப் போலவே .

இவையெல்லாவற்றையும்
உடனடியாக செயல்படுத்த விரும்பினேன் -

நேற்றைக்கும் அதற்கு முன்பும்
விரும்பியது போலவே .