சனி, 26 மார்ச், 2011

நேற்றைப் போலவே... ( கவிதை ஒன்று )







                  
என் அறையை இன்னும் கொஞ்சம்
நேர்த்தியாக அமைக்க விரும்பினேன் -

நகரத்திலிருக்கும் ஒரு பல் மருத்துவரின்
வரவேற்பறையைப் போலவே .

என் ஆடைகளை இன்னும் கொஞ்சம்
நேர்த்தியாக அணிய விரும்பினேன் -

முதன் முதலாக நேர்முகத் தேர்வை
எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின்
ஆடையைப் போலவே.

என் மனத்தை இன்னும் கொஞ்சம்
இலேசாக்க விரும்பினேன் -

பால் குடித்து முடித்தபின்
தாயின் முந்தானைக்குள்
உறங்கத் துவங்கும் ஒரு சிசுவைப் போலவே .

என் குரலை இன்னும் கொஞ்சம்
மிருதுவாக்க விரும்பினேன் -

பெண் பார்க்கும் நிகழ்வில்
அவன் கேட்கும் கேள்விகளுக்கு
அவள் தரும் பதில்களைப் போலவே.

என் புத்தகங்களை இன்னும் கொஞ்சம்
சீராக அடுக்க விரும்பினேன் -

ஒரு பழக்கடைக் காரனின்
தட்டுகளில் அடுக்கப்படடிருக்கும்
ஆப்பிள்களைப் போலவே .

இவையெல்லாவற்றையும்
உடனடியாக செயல்படுத்த விரும்பினேன் -

நேற்றைக்கும் அதற்கு முன்பும்
விரும்பியது போலவே .

1 கருத்து:

Chitra சொன்னது…

ஒரு பழக்கடைக் காரனின்
தட்டுகளில் அடுக்கப்படடிருக்கும்
ஆப்பிள்களைப் போலவே .


....உவமைகள் நல்லா இருக்கின்றன.

கருத்துரையிடுக