புதன், 15 டிசம்பர், 2010

சாருவின் ஏழு புதிய நூல்கள்



டிசம்பர் 13 , மாலை .

உயிர்மையின் பதிப்பில் சாரு நிவேதிதா எழுதிய ஏழு நூல்களின் வெளியீட்டு விழா - தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில்.

குவிந்திருந்த இருசக்கர வாகனங்களுக்கிடையே என்னுடையதையும் சங்கமித்து, ஹெல்மெட்டை எல்லாம் வல்ல இறைவனின் பாதுகாப்பில் பத்திரப்படுத்தி விட்டு அரங்கத்துள் பாய்ந்தேன்.

அரங்கின் முன் பகுதியில் திரளாகக் கூட்டம் இருந்தாலும், பின் பகுதியில் மக்காச் சோளக் கதிரைக் கடித்த மாதிரி ஆங்காங்கே  காலி இருக்கைகள்.

அப்போதுதான் வரவேற்கத் துவங்கியிருந்தார் கவிஞர் மனுஷ்யபுத்திரன். காலி இருக்கைகள் அவரை நிறையவே உறுத்தியிருக்கக் கூடும். கலாச்சார வறுமையின் குறியீடே காலி இருக்கைகள் என்று வேதனைப்பட்டார். மெரினாவின் ஜனத்திரளுக்கிடையே விழா நடக்குமளவுக்கு ரசனை வளர வேண்டுமென்ற ஆவலையும் வெளியிட்டார்.

இலக்கியத்தையும், இசையையும் போற்றி வளர்க்கும் சென்னையின் சடையப்ப வள்ளலாம் நல்லி  குப்புசாமி செட்டியாரின் தலைமை உரை  கன கச்சிதம்.

சாரு எழுதிய  தேகம், ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி, சரசம்-சல்லாபம்-சாமியார், கனவுகளின் நடனம், கலையும் காமமும், மழையா பெய்கிறது, கடவுளும் சைத்தானும் ஆகிய ஏழு நூல்களை செட்டியார் வெளியிட , சாருவின் நண்பர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

சரசம்-சல்லாபம்-சாமியார் ( நித்தியானந்தர் குறித்து ) நூல் விமர்சனம் செய்து பேச ரவிக்குமார்  வரும்போது அரங்கத்துள் ஏராளமான ஆரவாரம். ( சேச்சே.. சாமியாருக்கெல்லாம் ரசிகர் மன்றம் அமைந்திருக்க வாய்ப்பேயில்லை.)  வேறு யாரும் அந்த நூல் பற்றிப் பேச மறுத்துவிட்டதால் தான் அகப்பட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்ட ரவிகுமார் , நூல் பற்றிப் பேசியதைவிட தனக்கும் சாருவுக்குமிடையே நட்பு வளர்ந்த சரிதை குறித்து அதிகம் பேசி நிறைவு செய்தார்.

வழக்கம் போலவே கண்ணியமான பேச்சு தொலைக்காட்சி முன்னாள் இயக்குனர்  நடராஜனுடையது.

எந்தவொரு கூட்டத்திற்கும் கத்தை கத்தையான பேப்பர்களுடனும் , காத்திரமான கருத்துக்களுடனும் ஆஜராவது  தமிழச்சி தங்கபாண்டியனின் ஸ்டைல். ஒரு  எம்.·பில் படிப்பிற்கான  முனைப்புடன் கூடிய  தயாரிப்புகளோடு , வசீகரிக்கத்தக்க குரல் ஏற்ற இறக்கங்களோடு கருத்துக்களைப் பிசிறில்லாமல் சபை முன்னர் சமர்ப்பிக்கும் லாவகம் மல்லாங்கிணறு மகராசிக்கே கை வந்த கலை. இம்முறையும் அவ்வாறே

எந்தப் புத்தகத்தையும் இன்னும் வாசிக்கவில்லை என்ற விளக்கத்தோடு உரையைத் துவக்கினார் கவிஞர் கனிமொழி. மனுஷ்யபுத்திரனின் `கூட்டக் குறைவு' ஆதங்கத்திற்கு மருந்திடுவது போல அமைந்திருந்தது அவர் பேச்சு.

" இந்தக் கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இரு நூறு பேர் இருக்கிறார்கள்.   எந்த ஒரு நல்ல இலக்கியக் கூட்டமாக இருந்தாலும் அங்கே அவர்கள் இருப்பார்கள். அவர்களுக்குள் பேசிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஒருவருக்கொருவர் முகம் பரிச்சயமானவர்களாக இருப்பர்கள் "

கனிமொழியின் மேற்கண்ட மொழி நூறு சதவீதம் உண்மையே. எனக்குப் பக்கத்திலிருந்தவரைக் கூட அடிக்கடி பார்த்திருக்கிறேன். பெயர் தெரியாது. என்னிருக்கையிலிருந்து சற்று தள்ளி இருந்த இரானிய சிவப்பு  புன்சிரிப்பரை    இறையன்புவின் ஒரு பட்டிமன்றத்தில் பேச்சாளராகக் கூடப் பார்த்த நினைவு.  

கார்ட்டூனிஸ்ட் தனின் பேச்சு தொடக்க முதலே படு சுவாரஸ்யம்.  " மேடையில் அமர்ந்திருக்கும் .." என்று சம்பிரதாயமாக விளித்து விட்டு , மேடையில் வீற்றிருந்த காலி நாற்காலிகளை ஒரு லுக் விட்டு சிரித்தார் பாருங்கள் - நகைச்சுவையின் உச்சம்

சீரியஸ் மூடில் இருந்த கூட்டத்தை ஹாஸ்ய மூடுக்கு வெகு இலகுவாகக் கொண்டு வந்த தன், வெகு ஜன ஊடகங்களில் பணியாற்றியதால் தம்மால் நளினமாகத்தான் விமர்சிக்க முடிகிறது என்று லேசாகக் குறைப்பட்டுக்  கொண்டார். இடையிடையே மிஷ்கினின் நந்தலாலாவைப் பாராட்டினார். (மிஷ்கின்ஜி, உங்களுடைய கருப்புக் கண்ணாடி ஐடியா சூப்பர் .மேடைப் பேச்சை  ரசிக்கிறீர்களா அல்லது அசந்து தூங்குகிறீர்களா என்று தொகுப்பாளினியால் கூட கண்டு பிடிக்க முடியாது ).

தனது முறையில் ஏச வந்த.. மன்னிக்கவும், பேச வந்த மிஷ்கினின் உரை ஒரு நெடிய ராகமாலிகா. சாவேரியின் குளுமையும், முகாரியின் சோகமும் அதில் கலந்து கட்டி வழிந்தோடியது.`நந்தலாலாவை எல்லோரும் சீக்கிரம் பார்த்து விடுங்கள், இல்லாவிட்டால் தியேட்டரைவிட்டு ஓடிவிடும்' என்று டிப்ஸ் கொடுத்தார். படம் காப்பி என்று மொழிந்தவர்களை வசை பாடினார். தான் பட்ட சிரமங்கள் அவர்களுக்குத் தெரியாது என்று  விசனப் பட்டார்சாருவின் புத்தகத்தைத் தான் படித்துவிட்டதாக மூன்று முறை குறிப்பிட்டதன் மூலம் `தான் படிக்கவில்லைஎன்ற உண்மையை நிரூபித்து விட்டு செட்டில் ஆனார்.

வள்ளி திருமணம் நாடகத்தில் அதிகாலை இரண்டு மணிக்கு வந்து சேரும் முருகனைப் போல , கடைசியாக  விமர்சிக்க வந்தார் எஸ்.ரா. எப்போதும் போல் காந்த நாவை அவர் சுழற்றத் தொடங்கஅரங்கிலிருந்தவர்களெல்லாம் கணப் பொழுதில் இரும்புத் துண்டுகளாய்   ஈர்க்கப்பட்டார்கள் - ஒட்டு மொத்தமாக.

 வாதை குறித்து அவர் பிரசவித்த சொற்கள் மீண்டும் மீண்டும் மனதிற்குள் கொணர்ந்து அசை போட வைக்குமளவுக்கு சாரம் மிகுந்தவை. எழுத்தாளர் ஜி.நாகராஜன் தனது மது அடிமைப் பழக்கத்தால்  எதிர் கொண்ட வாதையின் உக்கிரம் குறித்து அவர் விளக்கியபோது தேகம் சிலிர்த்தது நிஜம். எழுத்தாளன் அவமானங்களைக் கண்டு அஞ்சுவதில்லை, மாறாக அவமானங்ளை விருப்பத்துடன் தேடிச் செல்கிறான் என்ற விவாதத்துக்குரிய சிந்தனையைத் தெளித்து , மிகுந்த அப்ளாஸ்களை அள்ளிச் சென்றார்.

நிறைவாக நன்றி சொல்ல வந்தார் சாரு. இப்போதுதான் மணி ஏழு என்பது போன்ற ஒரு சாவகாச தோரணையுடன் தொடங்கிய போது . முகம் முழுக்கப் பெருமிதமும், உரை முழுக்க உற்சாகமும் தாண்டவமாடியது. ` முக்கியமான ஒரு விஷயம் - ஆனா மந்து போச்சு ' என்ற நகைச்சுவை முந்திரிப் பருப்புகள் ஆங்காங்கே மிளிர, நல்ல காரமான  மிக்சர் உரை. வழக்கம் போல கேரள நன்மக்கள் போற்றப்பட்டார்கள். தமிழ் ஊடகங்கள் திட்டப்பட்டார்கள். பேச்சின் நடுவே வாய் தவறி தனது வயது ஐம்பது ப்ளஸ்  என்று சொல்லிவிட்ட அந்த இருபது ப்ளஸ் சாரு உரையை நிறைவு செய்த சமயம் , இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாமோ என்று நாம் எண்ணிய போது  நேரம் பத்து மணியைத் தாண்டியிருந்தது.   

வெளியில் வரும்போது யாரோ அதிசயத்து சொன்னார்கள் ` அட, ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்கு  இவ்வளவு கூட்டமா '.

உண்மைதான் 

அது சேர்க்கப்பட்ட கூட்டமல்ல  - சாருவால் ஈர்க்கப்பட்ட கூட்டம்








13 கருத்துகள்:

dunga maari சொன்னது…

சிறப்பான வர்ணனைகளுடன் அமைந்திருக்கும் கூட்டம் பற்றிய தொகுப்பு. வாழ்த்துக்கள்.

jigopi

நிஷாந்தன் சொன்னது…

வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.கோபி அவர்களே.

உங்கள் பாராட்டு நிச்சயம் ஊக்கம் அளிக்கும்.

Tamizh சொன்னது…

வரிகளை வாசிக்கும் போது காட்சிகளை கண்முன்னே தோன்ற வைத்த லாவகம் அருமை

அற்புதமான அனுபவத்தை அழகாக அளித்தமைக்கு நன்றி

நர்சிம் சொன்னது…

அற்புதம். நிறைய எழுதுங்கள்.

நிஷாந்தன் சொன்னது…

நன்றி திரு.நர்சிம் அவர்களே !

தங்கள் தீந்தமிழ் அலைகளான தீக்கடல் வாசிக்க ஆவல்.

நிஷாந்தன் சொன்னது…

அழகு மொழியில்
அகம் மகிழ்ந்து பாராட்டிய
தமிழ்செல்விக்கு
தகைசால் நன்றி.

Annamalai Swamy சொன்னது…

//அரங்கின் முன் பகுதியில் திரளாகக் கூட்டம் இருந்தாலும், பின் பகுதியில் மக்காச் சோளக் கதிரைக் கடித்த மாதிரி ஆங்காங்கே காலி இருக்கைகள்.//
மிகவும் ரசித்தேன்.

நிஷாந்தன் சொன்னது…

நன்றி திரு.அண்ணாமலை சுவாமி.


தொடர்ந்து வலைப் பக்கத்திற்கு வருகை தாருங்கள்.

Ben சொன்னது…

அருமையான எழுத்து நடை. வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்களேன்!

நிஷாந்தன் சொன்னது…

உற்சாகம் தரும் ஊக்கத்திற்கு நன்றி பென் அவர்களே !

a சொன்னது…

விவரணைகள் அருமை.................

நிஷாந்தன் சொன்னது…

நன்றி திரு.யோகேஷ் அவர்களே.

lovely சொன்னது…

Nice commentary

கருத்துரையிடுக