ஞாயிறு, 9 ஜனவரி, 2011

சென்னை புத்தகக் காட்சி




மார்கழி மாதம் பிறந்து விட்டால் சென்னை பயங்கர பிசியாகி விடுகிறது

அரைகுறையாக வெந்த டெல்லி அப்பளத்தின் மீது கொஞ்சம் மிளகாய் பொடியும், நிறைய தூசியும் பூசி சுவைத்து, ஜெயண்ட் வீலில் பிரயாணித்து வயிறு கலங்கி , மொய்த்த  ஈக்களைத் தூரமாக  விரட்டிவிட்டு கரும்பு சாற்றினைப் பருகி  சுற்றுலாப் பொருட்காட்சியை  மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள் ஒரு பக்கம்.

"சாயந்திரம் மியூசிக் அகாடமியில சுதா பாடறாங்க..இன்னிக்கு வாணி மஹால்ல கத்ரி கச்சேரியாக்கும்" என்று பட்டுப் புடவையும், அங்கவஸ்திரமும் சலசலக்க பரபரப்பாக இன்னோவாவிலும் , போலோவிலும் ஆரோகணித்து இசை விழாக்களை ரசிக்கும் கலா ரசிகர்களின் ஆலாபனை இன்னொரு பக்கம்.

இதற்கு நடுவே , இன்னுமோர் உற்சவசமாய் ....சென்னை புத்தகக் காட்சி.

இந்த வருடம் 34 வது புத்தகக் காட்சியாம் இது.

தொண்ணூறுகளில் காயிதே மில்லத் கல்லூரியில் ஒரு சிறிய அளவில் தொடங்கப்பட்ட புத்தகக் காட்சி , இப்போது ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் இரண்டு லட்சம் சதுர அடியில் , 650  அரங்குகளோடு பிரம்மாண்டமாய் வளர்ந்திருப்பது அற்புதம்

கடந்த வருடம் போலல்லாமல், இவ்வாண்டு ஏற்பாடுகளில் நல்ல முன்னேற்றம்

ஸ்டால்களுக்கிடையே நெரிசல் இல்லாமல்  இலகுவாக மக்கள் சென்று வரும் வகையில் நல்ல அகலமான பாதைகள். கம்பன், இளங்கோ, பாரதியார்  என்று புலவர்களின் பெயரில் அவற்றுக்கு நாமகரணம் வேறு. ஷேக்ஸ்பியர், ஷெல்லி பெயர்களிலும் பாதைகள்         (ஆங்கிலத்திற்கு மரியாதை ! ).

ஒரு சில ஸ்டால்கள் மட்டும் கிராமத்துத் தெருவிளக்கு மாதிரி டல்லடித்துக் கொண்டிருக்க , பல ஸ்டால்களில் `பீக் அவர்' பஸ் மாதிரி நல்ல கும்பல் .

 குறிப்பாக உயிர்மை ஸ்டாலில்  மனுஷ்யபுத்திரன், சாரு நிவேதிதா போன்ற இலக்கிய நட்சத்திரங்களைச்  சுற்றிலும் ஏராளமான ரசிகர்கள்.சாருவின் முகமெல்லாம் சிரிப்பு பொங்க , இரு கரம் கூப்பி  " வாங்க, வாங்க.... போன வருஷம் பார்த்தது " என்று  வரவேற்றுக் கொண்டிருக்க, மாறாத புன்னகையுடன் மனுஷ்யபுத்திரன் ஆட்டோகிராப் வழங்கிக் கொண்டிருக்க, புத்தகம் வாங்க நேயர்கள் முண்டியடித்துக் கொண்ட காட்சி உன்னதம்.

சாருவின் `தேகம்', மனுஷின் ` இதற்கு முன்பும் இதற்கு பிறகும் ' , எஸ்.ராவின் `துயில்' போன்ற புத்தகங்கள்  தலப்பாக்கட்டு பிரியாணி ரேஞ்சில் மள மள வென்று காலியாகிக் கொண்டிருந்தன.

கடந்த முறை மையம் கொண்டிருந்த `சமையல் புத்தகப்' புயல் இம்முறை கரையைக் கடந்து விட்டது போலிருக்கிறது. சுய முன்னேற்றம், சமூகம், விளையாட்டு, அரசியல் தொடர்பான புத்தகங்கள் ஏராளம்.

வழக்கம் போலவே புதினங்களுக்கும் குறைவில்லை. கல்கியின் பொன்னியின் செல்வன் மட்டும் பல்வேறு அவதாரங்கள் எடுத்து பலப்பல ஸ்டால்களில் காட்சி தந்தது. ஓரிடத்தில் 450 ரூபாய்க்கும் , மற்றோரிடத்தில் 250 ரூபாய்க்குமாக அச்சுத் தகுதிக்கேற்ற விலை .ஒப்பற்ற காவியமான அதை சினிமா பாட்டுப் புத்தக ரேஞ்சுக்கு தரம் குறைத்தது வருத்தமளிக்கிறது. நூல்களைப் `பொதுமை'ப் படுத்துவதின் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்று. இம்மாதிரியான இலக்கியப் பொக்கிஷங்களையாவது நேர்த்தியோடு அச்சிட்டு வழங்கப்படுவதைப் பதிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஒரு ஸ்டாலில் விமலாதித்ய மாமல்லன் அளவளாவிக் கொண்டிருக்க, மற்றோர் இடத்தில் ஞானி `49 ' பிரிவு பற்றி விவரித்துக் கொண்டிருந்தார்


தினத்தந்தி அரங்கில் `வரலாற்றுச் சுவடுகள்' நூல் விற்பனையும் படு  அமர்க்களம். ஆனால் ஒரே ஒரு குறை - பக்கத்து அரங்கில் பத்து ரூபாய்க்கு வாங்கிய புத்தகத்தைக்  கூட   ஒரு பையில் போட்டுக் கொடுக்க, நல்ல கனமான வரலாற்றுச் சுவட்டை வெறுமனே கையில் தூக்கிக் கொடுக்கிறார்கள். எப்படி வைத்துக் கொள்வது என்று தெரியாமல் பலர் ஒரு குழந்தையைப் போல சுமந்து திரிந்து அவஸ்தைப் பட்டது ஒரு வரலாற்றுச் சுவடு. தினத்தந்தி ஆவன செய்வார்கள் என்று நம்புவோம்.


புத்தகங்களுக்கு இணையாக குறுந்தகடுகள் விற்பனையும் கன ஜோர்  குறிப்பாகக்  கல்வி வளர்ச்சி , மொழி வளர்ச்சி தொடர்பான குறுந்தகடுகள் .

அரங்கங்கள்  முழுவதையும் நடந்து பார்ப்பது சற்றே கடினமான விஷயம்தான். முழங்கால்களைத்  தாஜா செய்து கொண்டே சமாளிக்க வேண்டியிருக்கிறது. கடக்க முடியாத பலர் அக்கடாவென்று தரையிலேயே அமர்ந்து மசாலா டீ குடிப்பதைக் காண முடிகிறது.

அரங்கின் முற்பகுதியில் ஆங்காங்கே பெஞ்சுகள் போடலாம். ஏற்பாட்டாளர்கள் பரிசீலிக்கவும்.


அரங்கத்திற்கு வெளியே பிரம்மாண்டமான பந்தலின் கீழ் பரப்பப்பட்ட ஏராளமான நாற்காலிகள் -   முழுக்க இலக்கிய ரசிகர்கள்
செக்கச் சிவந்த மேனியோடு, செம்மொழி நர்த்தனமாட கம்பீர குரலில் கவிஞர் வாலியின் தலைமையில் கவிய்ரங்கம்


எனக்கு ஏன் பிடிக்கும் நந்தலாலா
என் இதயத்திற்குள் அவர் வந்ததாலா

என்று வாலி தொடங்க,


நாங்கள் காற்றை சுவாசிக்கிறோம்
காற்று உன் கவிதையை சுவாசிக்கிறது


என்று நந்தலாலா திருப்பித் தாக்க, அரங்கு கொள்ளா சுவைஞர்களிடமிருந்து பறக்கிறது அப்ளாஸ்.

செவிக்குணவு இருக்கும்போதே வயிற்றுக்கும் ஈவதற்கு வசதியாக சற்று தூரத்தில் செட்டி நாடு கேட்டரிங். பாட்டுக் கேட்டுக் கொண்டே பரோட்டாவை வெட்டுவதும் சுகம்தான்.

சென்னையைத் தாண்டி வசிக்கும் அன்பர்களுக்கொரு விண்ணப்பம்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் மிகுந்த சிரத்தையோடு ஏற்பாடு செய்திருக்கும் இந்த அருமையான புத்தகக் காட்சியை தவறவிட்டு விடாதீர்கள்.

ஜனவரி மாதம் 17 தேதி வரை காட்சி உண்டு.

பொங்கலை உங்கள் ஊரில் கொண்டாடிவிட்டு அடுத்து வரும் விடுமுறை நாட்களில் வாருங்கள் சென்னைக்கு. ( ஜல்லிக்கட்டை அலங்கா நல்லூர்காரர்கள் கவனித்துக் கொள்வார்கள், கவலை வேண்டாம்).

உங்கள் ஆவல் தீர புத்தகங்களை சுவாசித்து, ஏராளமாக அள்ளிச் செல்லுங்கள்.

செலவென்று எண்ண வேண்டாம் - அறிவின் சேமிப்பு என்பதை உணருங்கள்.

படிப்பாளிகள் கெட்டுப் போனதாக சரித்திரமில்லை.






2 கருத்துகள்:

Nagendra Bharathi சொன்னது…

Thanks for giving us the visual feeling of visiting the book fair- Nagendra Bharathi

நிஷாந்தன் சொன்னது…

கருத்துக்கு நன்றி நண்பரே !

அடிக்கடி வலைப்பூவிற்கு வருக.
அன்புடன் கருத்துரை தருக.

கருத்துரையிடுக