செவ்வாய், 5 ஏப்ரல், 2011

அன்பான வேட்பாளப் பெரு மக்களே ...!




தேர்தல் இதோ நெருங்கி விட்டது...!

வேட்பாளர்கள் சுட்டெரிக்கும்  வெயிலென்றும் பார்க்காமல் சந்து சந்தாக , தெருத் தெருவாக சுற்றி சுற்றி வாக்கு சேகரிக்கிறார்கள். அவர்களை  விடவும் சுறுசுறுப்பாக கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு பின்னாலேயே திரிகிறது தேர்தல் ஆணையம்.

எதற்காக ? அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுப்பதற்காக !

இந்த நிலைமை வந்து விட்டதற்காக உண்மையிலேயே அரசியல் கட்சிகள் கூச்சப்பட வேண்டாமா ?

ஆளும் கட்சியாக இருக்கும் பட்சத்தில் செய்த நன்மைகளைக் கூறியும், ஆளும் வாய்ப்புக் கிட்டாத கட்சிகள் ( எதிர்க் கட்சி என்பதை  இப்படி  நாசூக்காகச் சொல்லலாமே ) தங்களுக்கு ஆட்சி செய்யும் வாய்ப்பு கிட்டுமேயானால் அவர்கள் செய்யப் போகும் நன்மைகளைக் கூறியும் வாக்குக் கேட்டால் அல்லவா அங்கே ஜன நாயகம் தழைத்தோங்கும் ?

மாறாக ஒரு ஜன நாயகக் கட்டமைப்பில் எஜமானராக இருக்க வேண்டிய வாக்காளரை  யாசகராக மாற்றும் அரிய பணியைச் செய்வதற்கு எல்லாக் கட்சிகளும் முனைப்போடு வேலை செய்வதும் , அதைத் தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் என்னும் அரசுத் துறை போலீஸ் வேலை பார்ப்பதும் விரும்பத் தக்கதுதானா

இந்த  நிலை வருவதற்காகவா நமது தேசியத் தலைவர்கள் இன்னுயிர் ஈந்து சுதந்திரம் பெற்றுத் தந்தார்கள் ? இதற்காகவா அண்ணல் அம்பேத்கார் போன்ற அறிஞர்கள் நமக்கு அரசியலமைப்பு சட்டம் வடிவமைத்துத் தந்தார்கள் ?

அன்பான வேட்பாளப் பெரு மக்களே ...! உங்களுக்கொரு வேண்டுகோள் ..

இனியும் இந்த தேசத்தின் குடிமகனை  உங்களுடைய எலும்புத் துண்டுக்கு ஓடி வரும் ஞமலியாக்காதீர்கள் . உங்களுக்கு ஆட்சி உரிமை வழங்கும் அவனுக்கு உரிய மரியாதையைக் கொடுங்கள் . உண்மையிலேயே அவனுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டுமேயானால், உங்களுக்கு வழங்கப்பட்ட ஐந்து ஆண்டு காலத்திற்குள் எவ்வளவோ செய்யலாமே , அந்த வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்..தேர்தல் சமயத்தில் அவன் முகத்தில் கரன்சியை விட்டெறிந்து விட்டு ஐந்தாண்டு காலம் தொகுதிப் பக்கமே தலை வைத்துப் படுக்க வேண்டியதில்லை என்ற உங்கள் மனப் பாங்கினை சற்றே மாற்றிக் கொள்ளுங்கள் - அவனுடைய  நலம் கருதி மட்டுமல்ல், உங்களின் நலம் கருதியும்தான்.

உங்களின் கடந்த கால சாதனைகளும், வருங்காலத் திட்டங்களும் மட்டுமே வாக்காளன் முன் நீங்கள் வைக்கும் வெகுமதியாக இருக்கட்டும்.

அதனை சீர் தூக்கிப் பார்த்து வாக்காளன் அளிக்கும் தீர்ப்பில் நேர்மை மிளிரும் !

உரிய நபரைத் தேர்ந்தெடுத்தோம் என்ற நிம்மதி  வாக்காளருக்குக் கிடைக்கும் !

சரியான வகையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றோம் என்ற அற்புதமான திருப்தி உங்களுக்கு வசப்படும்  !

அதன் மூலம் உங்கள் செயல் திறன் மேம்பட்டு தேசம் பயன் பெறும் !

எத்தனையோ நாடுகளுக்குக் கிடைக்காத   ஜன நாயக உரிமை நமக்குக் கிடைத்துள்ளதே அதன் மூலமாக நமது இந்திய தேசம் உலக அரங்கில்  தலை நிமிர்ந்து நிற்கும்.

நல்லதே நடக்கும்.... நம்புவோமாக ...!






3 கருத்துகள்:

Chitra சொன்னது…

.தேர்தல் சமயத்தில் அவன் முகத்தில் கரன்சியை விட்டெறிந்து விட்டு ஐந்தாண்டு காலம் தொகுதிப் பக்கமே தலை வைத்துப் படுக்க வேண்டியதில்லை என்ற உங்கள் மனப் பாங்கினை சற்றே மாற்றிக் கொள்ளுங்கள் - அவனுடைய நலம் கருதி மட்டுமல்ல், உங்களின் நலம் கருதியும்தான்.



..... நல்ல அறிவுரை.

சக்தி கல்வி மையம் சொன்னது…

பயனுள்ள பதிவு..

சக்தி கல்வி மையம் சொன்னது…

இந்த நிலைமை வந்து விட்டதற்காக உண்மையிலேயே அரசியல் கட்சிகள் கூச்சப்பட வேண்டாமா ? -- எப்படி பன்னுவாங்க பாரு..

கருத்துரையிடுக