வியாழன், 4 நவம்பர், 2010

தீபாவளிக் கொண்டாட்டங்கள்




சூரிய அஸ்தமன நொடியிலிருந்து சென்னை வானவெளியெங்கும் வண்ண மலர்களின் அமோக அணிவகுப்பு.

தெருவின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு சீறிப் பாயும் சிவகாசி ராக்கெட்டுகள் .

டமால் , டுப் போன்ற இன்னபிற சத்தங்கள் மூலம் பேப்பர் துண்டுகளை சிதறடிக்கும் வெடிகள் .

விரல்களில் கந்தகம் பூசிய சின்னஞ்சிறு தளிர்களின் உழைப்பில் கிட்டிய மகசூல்  -  பட்டாசுகளாய் ஊரெங்கும் .

சமையல் எண்ணை விலை உயர்வின் கவலையோடு , வடை விள்ளாமல் வருமா என்ற கவலையும் சேர்ந்து கொள்ள அடுப்புடன் போராடும் தாய்மார்கள் .
தீபாவளியின் மணம் காற்றில் நீக்கமற நிறைந்திருக்கிறது.

பொருள் தேடும் அதீத பரபரப்பில் வருடம் முழுக்க சிக்கித் தவிக்கும் மனித குலத்திற்குப் பண்டிகைகள் சந்தேகத்திற்கிடமின்றி அவசியமாகின்றன.


ஒவ்வொரு சமயத்தாரும் கொண்டாடுவதற்கான காரணங்களை வெவ்வேறாக வகுத்துக் கொண்டாலும் நோக்கம் ஒன்றாகவே அமைகின்றது. அதில் குறிப்பிடத்தக்க அம்சம் சுவையான உணவு சுவைப்பதும், புத்தாடை அணிவதும், உறவினர் மற்றும் நண்பர்களை சந்தித்து உரையாடி மகிழ்வதும்தான்.

ஒரு முறை ரசிகமணி டி.கே.சி அவர்களிடம் , பஜ்ஜியில் சுவையானது வாழைக்காய் பஜ்ஜியா அல்லது உருளைக் கிழங்கு பஜ்ஜியா என்ற கேள்வி கேட்கப்பட்டது.

ரசிகமணியின் பதில் இது: " அளவான உப்பும், காரமும் சேர்க்கப்பட்ட சுவையான கடலை மாவில் ஒரு துண்டு ஹிந்து செய்தித் தாளினைத்  தோய்த்து எடுத்து சூடான எண்ணையில் பொரித்து எடுத்தால் கிடைக்கும் ஹிந்து பேப்பர் பஜ்ஜிதான் ருசியானது ".

இதனால் பெறப்படும் நீதி யாதெனில்  சுவை என்பது சூடான எண்ணையிலும்  மாவிலும்தான் இருக்கிறதே தவிர வாழைக்காயிலோ அல்லது உருளைக் கிழங்கிலோ இல்லவே இல்லை.

( நணபர்களோடு உட்கார்ந்து தண்ணியடிப்பது சந்தோஷம் தருவதாக நம்பும் அன்பர்களே, இப்போது புரிந்து கொள்ளுங்கள்- சந்தோஷம் தருவது நண்பர்களின் நெருக்கம்தானே தவிர ஆல்கஹால் திரவம் அல்ல.)

இனியவர்களின் சந்திப்பின் மூலமாகவும் , இன்சுவை உணவின் மூலமாகவும் நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற பெருமை பெற்ற பண்டிகைகளைப் போற்றுவோம் !

அக்கம் பக்கத்தாருக்கு சிரமம் தராத வகையிலும் காற்றினை மாசு படுத்தாத முறையிலும்  அளவான பட்டாசுகளை வெடித்து, உடல் நலத்திற்குக் கேடு தராத உணவுகளை அருந்தி மகிழ்வோடு தீபத் திரு நாள் கொண்டாடிட வாழ்த்துக்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக